சின்னவேடம்பட்டி ஏரியில் பறவைகளின் தாகம் தீர்க்க தண்ணீர் ஊற்றும் பணி
சின்னவேடம்பட்டி ஏரியில் பறவைகளின் தாகம் தீர்க்க தன்னார்வ அமைப்புகள் சார்பில் தண்ணீர் ஊற்றப்பட்டு வருகிறது.
கணபதி,
கோவை கணபதி அருகே சின்னவேடம்பட்டி ஏரி உள்ளது. இந்த ஏரி கோவை வடக்கு பகுதியின் நீராதாரமாக விளங்கி வருகிறது. கடந்த 30 ஆண்டுகளாக இந்த ஏரி வறண்டு கிடக்கிறது.
எனவே ஏரியை மீட்டெடுக்கும் முயற்சியில் சின்னவேடம்பட்டி ஏரி பாது காப்பு அமைப்பு, கவுசிகா நீர்கரங்கள் ஆகிய அமைப்புகளை சேர்ந்த தன்னார்வலர்கள் அங்கு களப்பணி செய்து வருகிறார்கள்.
இங்கு 100-க்கும் மேற்பட்ட பறவையினங்கள் உள்ளன. தற்போது கோடைகாலம் என்பதாலும், ஏரியில் தண்ணீர் இல்லை என்பதாலும் இங்கு உள்ள பறவைகள் தாகம் தீர்க்க அலைந்து திரிகின்றன.
மண் குடுவைகள்
எனவே பறவைகளின் தாகம் தீர்க்கும் வகையில் தன்னார்வ அமைப்புகள் சார்பில் தண்ணீர் வைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதற்காக சிறிய மண் குடுவைகளில் தண்ணீர் நிரப்பி அங்குள்ள மரங்களில் கயிறால் கட்டி வருகிறார்கள்.
மேலும் அந்த குடுவைகளில் தண்ணீர் உள்ளதா என்று கண்காணிக்க தனிக்குழுவும் அமைக்கப்பட்டு உள்ளது. அவர்களும் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். இது குறித்து தன்னார்வ அமைப்பை சேர்ந்தவர்கள் கூறியதாவது:-
4 தொட்டிகள்
சின்னவேடம்பட்டி ஏரியில் உள்ள பறவைகளை காப்பாற்ற 2,800-க்கும் மேற்பட்ட அரியவகை மரங்கள் நட்டு பராமரிக்கப் பட்டு வருகிறது. மேலும் பறவைகளின் தாகம் தீர்க்க தற்போது முதற்கட்டமாக 25 மண் குடுவைகள் வைக்கப்பட்டு உள்ளன.
அந்த குடுவைகளில் 2 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் நிரப்பப்பட்டு வருகிறது. அதுபோன்று ஏரியின் உள்பகுதியில் 10 அடி அகலம், ஒரு அடி ஆழத்தில் 4 தொட்டிகள் கட்டப்பட உள்ளது. அந்த பணிகள் விரைவில் தொடங்க உள்ளன.
தாகம் தீர்த்துக்கொள்ளும்
தற்போது இங்கு மண் குடுவைகள் வைக்கப்பட்டு உள்ளதால், பறவைகள் தண்ணீர் தேடி அலையாமல், அங்கேயே தாகம் தீர்த்துக்கொள்ளும். இதனால் இந்த இடத்தைவிட்டு வெளியே செல்ல வாய்ப்பு இல்லை.
அதுபோன்று இங்கு மேலும் பல பறவைகள் வந்து கூடு கட்டி வாழ வாய்ப்பு உள்ளது. தற்போது வைக்கப்பட்டு உள்ள மண் குடுவைகள் போதாது என்றால் இன்னும் அதிகமாக வைக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.