அம்மன் கோவில்களில் மயானக்கொள்ளை விழா
குறிஞ்சிப்பாடி மற்றும் விருத்தாசலம் பகுதி அம்மன் கோவில்களில் மயானக்கொள்ளை விழா நடைபெற்றது.
குறிஞ்சிப்பாடி,
குறிஞ்சிப்பாடி உடையார் வீதியில் பிரசித்திபெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மயானக்கொள்ளை விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டுக்கான விழா கடந்த 10-ந் தேதி தொடங்கியது. தொடர்ந்து தினந்தோறும் சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தது மேலும் அம்மன் வீதிஉலாவும் நடைபெற்றது.
விழாவின் சிகர நிகழ்ச்சியாக மயானக்கொள்ளை விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதையொட்டி அம்மனுக்கு பால், தயிர், இளநீர், பன்னீர் உள்பட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் சிறப்பு பூஜை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
அதன் பின்னர் இரவு பாவாடை ராயனுக்கு கும்பம் கொட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல் குறிஞ்சிப்பாடி சின்னக்கடை வீதியில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலிலும் நேற்று முன்தினம் மயானக்கொள்ளை விழா நடைபெற்றது. இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. பின்னர் மயானக்கொள்ளை விழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.
சேத்தியாத்தோப்பு
சேத்தியாத்தோப்பு அருகே வாழைக்கொல்லை கிராமத்தில் பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மயானக்கொள்ளை விழா நடைபெற்றது. இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதையடுத்து அங்குள்ள சுடுகாட்டில் மயானக்கொள்ளை விழா நடைபெற்றது. இதில் பேயோட்டம் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விருத்தாசலம்
விருத்தாசலம் சந்தைத்தோப்பில் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயானக்கொள்ளை விழா கடந்த 7-ந்தேதி காப்புக்கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடர்ந்து அம்மன் வீதிஉலா, அம்மன் குறத்தி வேடம் அணிந்து குறி சொல்லும் நிகழ்ச்சி, குடல் புடுங்கும் நிகழ்ச்சி உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. தொடர்ந்து மயாக்கொள்ளை விழா மற்றும் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
இதையொட்டி அம்மனுக்கும் தாண்டவராய சுவாமிக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. பின்னர் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதையடுத்து சுவாமிகள் கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். விழாவின் முக்கி நிகழ்ச்சியாக நாளை (புதன்கிழமை) செடல் உற்சவமும், நாளை மறுநாள் (வியாழக்கிழமை) திருவிளக்கு பூஜை மற்றும் அம்மன் வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர்கள் ராஜா, பாலசுப்பிரமணியன் மற்றும் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.