முட்டை வியாபாரியிடம் ரூ.60 ஆயிரம் பறிமுதல் தேர்தல் பறக்கும் படையினர் நடவடிக்கை
முட்டை வியாபாரியிடம் ரூ.60 ஆயிரத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனா்.
விக்கிரவாண்டி,
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி தேர்தல் பறக்கும் படை குழுவை சேர்ந்த அலுவலர் நஜீர் தீன் தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தனபால், ஏட்டுகள் சண்முக சுந்தரம், அமுதா ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று பிற்பகல் 3.15 மணியளவில் பனமலை கிராமத்தில் பனமலை ஏரி மதகு அருகில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக முட்டை லோடு ஏற்றிவந்த, மினிவேனை சோதனை செய்த போது உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.60 ஆயிரம் சிக்கியது. விசாரணையில் வேனில் வந்தவர் கண்டாச்சிபுரம் அருகே உள்ள வி.சித்தாமூர் கிராமத்தை சேர்ந்த உத்தரகுமார் (வயது 26), முட்டைகளை கடையில் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
இருப்பினும் உரிய ஆவணங்கள் இல்லாததால் ரூ.60 ஆயிரத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து, தொகுதி உதவி தேர்தல் அலுவலர்கள் அறிவுடைநம்பி, தமிழ்செல்வி ஆகியோரிடம் ஒப்படைத்தனர்.
பின்னர், தலைமையிடத்து துணை தாசில்தார் ரேவதி, வருவாய் உதவியாளர்கள் தையல்நாயகி, சங்கீதா ஆகியோர் பணத்தை மாவட்ட தேர்தல் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.