ஏ.டி.எம்.களில் நிரப்புவதற்காக ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.1 கோடி சிக்கியது
ஏ.டி.எம்.களில் நிரப்புவதற்காக ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.1 கோடியே 9 லட்சத்து 45 ஆயிரத்து 800 சிக்கியது.
சென்னை,
தேர்தல் விதி மீறல்களை கண்டறிந்து தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் ஆங்காங்கே வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்,
நேற்று தேர்தல் பறக்கும் படையினர் பழைய மாமல்லபுரம் சாலை திருப்போரூரை அடுத்த கழிப்பட்டூர் பஸ் நிலையம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சென்னை சென்ற வாகனத்தை மடக்கி சோதனை செய்தனர். அதில் ரூ.1 கோடியே 9 லட்சத்து 45 ஆயிரத்து 800 இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
துப்பாக்கி ஏந்திய போலீஸ்காரர் டம்டம் திவாரி, குமார், தினேஷ், வசந்த் ஆகியோர் இருந்தனர்.
அந்த பணம் தனியார் வங்கி ஏ.டி.எம்.களில் நிரப்புவதற்காக எடுத்துச் செல்வதாக தெரிவித்தனர். ஆனால் அதற்கு உரிய ஆவணங்கள் இல்லாமல் இருந்தது. இதையடுத்து சென்னை மெட்ரோ ரெயில் தனி தாசில்தார் மற்றும் தேர்தல் பறக்கும் படை அதிகாரி வெங்கட்ரமணன் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் ரூ.1 கோடியே 9 லட்சத்து 45 ஆயிரத்து 800- ஐ கைப்பற்றினர்.
அந்த பணம் திருப்போரூர் தாசில்தார் அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு திருப்போரூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் அதிகாரி சுப்ரமணியனிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர் அந்த பணத்தை திருப்போரூர் சார்நிலை கருவூலத்தில் ஒப்படைத்தார்.
பொன்னேரி அருகே உள்ள தச்சூர் கூட்டு சாலை வழியாக வேகமாக வந்த மோட்டார் சைக்கிளை பூந்தமல்லி ஒன்றிய ஆணையாளரும் தேர்தல் பறக்கும் படை அதிகாரியுமான ரவி மற்றும் போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
அதில் அவரிடம் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.5 லட்சம் இருந்தது. அந்த பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து, பொன்னேரி தாசில்தார் மணிகண்டனிடம் ஒப்படைத்தனர். பணத்தை பெற்றுக்கொண்ட அவர், பொன்னேரி சார்நிலை கருவூலத்தில் செலுத்தினார்.
மோட்டார் சைக்கிளில் கொண்டு வரப்பட்ட பணம் தனியார் நிதி நிறுவனத்திற்குட்பட்டது என தெரியவந்தது. பணத்துக்கு உரிய ஆவணங்களை காண்பித்து பணத்தை பெற்று கொள்ளலாம் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதேபோல் பள்ளிப்பட்டு நகர எல்லையில் பறக்கும் படை அதிகாரி தேவி தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் இருந்து வேகமாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனர்.
காரில் சித்தூரைச் சேர்ந்த பூர்ணசந்திரசேகர் என்பவர் தனது குடும்பத்தினருடன் இருந்தார். அவரிடம் ரூ.3 லட்சத்து 9 ஆயிரத்து 500 இருந்தது. தனது பேத்தியின் மஞ்சள் நீராட்டு விழாவுக்்காக பள்ளிப்பட்டு பகுதியில் நகை வாங்குவதற்காக பணத்தை கொண்டு செல்வதாக தெரிவித்தார். ஆனால் அதற்கான ஆவணங்கள் ஏதும் அவரிடம் இல்லை.
இதனால் அவரிடம் இருந்த பணத்தை கைப்பற்றிய அதிகாரிகள் திருத்தணி கருவூலகத்தில் ஒப்படைத்தனர்.