தேர்தல் பணியில் ஈடுபடும் துணை ராணுவத்தினருக்கு கொரோனா தடுப்பூசி
தேர்தல் பணியில் ஈடுபடும் துணை ராணுவத்தினருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
கோவை,
தமிழகத்தில் வருகிற அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதைத்தொடர்ந்து தமிழகத்தில் கடந்த மாதம் 26-ந் தேதி மாலை முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. அதன்படி கோவை மாவட்டத்தில் பொதுச்சுவர்களில் ஒட்டப்பட்டு இருந்த போஸ்டர்கள், கட்சி விளம்பரங்கள் அகற்றப்பட்டன.
அத்துடன் அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்கு பரிசுபொருட்கள் மற்றும் பணம் பட்டுவாடா செய்வதை தடுக்க 30 பறக்கும் படை அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டு உள்ளன. இவர்கள் 24 மணி நேரமும் கோவையில் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
அத்துடன் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதற்காக சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்து துணை ராணுவத்தினர் 94 பேர் (ஒரு கம்பெனி) கடந்த மாதம் 28-ந் தேதி ரெயில் மூலம் கோவை வந்தனர். அவர்கள் ராணுவ ராம்நகரில் உள்ள மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தங்கி உள்ளனர்.
இதைத் தொடர்ந்து துணை ராணுவத்தினர் கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் விதமாக கொடி அணிவகுப்பு நடத்தினர்.
இந்த நிலையில் தேர்தல் பணியில் ஈடுபடும் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது. அதன்படி கூட்டம் கூடுவதை தவிர்க்கும் விதமாக துணை ராணுவத்தினர் ஒரு நாளைக்கு 15 பேர் என பிரிக்கப்பட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள உத்தரவிடப்பட்டு இருந்தது.
அதன்படி துணை ராணுவத்தினர் நேற்று கோவை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டனர். பின்னர் அவர்கள் அங்குள்ள அப்சர்வேஷன் அறையில் 20 நிமிடம் அமரவைத்து கண்காணிக்கப்பட்டனர். அதில் அவர்கள் யாருக்கும் எவ்வித பக்க விளைவுகளும் ஏற்பட வில்லை. இதையடுத்து அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.