பழந்தின்னி கருப்பண்ண ஈஸ்வரர் கோவில் சிவராத்திரி வழிபாடு: பூஜையில் வைக்கப்பட்ட வெள்ளி மோதிரம் ரூ.62 ஆயிரத்துக்கு ஏலம்

பழந்தின்னி கருப்பண்ண ஈஸ்வரர் கோவிலில் சிவராத்திரி வழிபாட்டையொட்டி பூஜையில் வைக்கப்பட்ட வெள்ளி மோதிரம் ரூ.62 ஆயிரத்துக்கு ஏலம் போனது.

Update: 2021-03-13 21:39 GMT
பழந்தின்னி கருப்பண்ண ஈஸ்வரர் கோவிலில் சிவராத்திரி வழிபாட்டையொட்டி பூஜையில் வைக்கப்பட்ட வெள்ளி மோதிரம் ரூ.62 ஆயிரத்துக்கு ஏலம் போனது. 
சிவராத்திரி வழிபாடு 
சிவகிரியை அடுத்த விளக்கேத்தி அருகே புதுஅண்ணாமலைபாளையத்தில் பிரசித்தி பெற்ற பழந்தின்னி கருப்பண்ண ஈஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று முன்தினம் சிவராத்திரி விழா நடைபெற்றது. இதையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேக பூஜை நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து சாமிக்கு வாழைப்பழங்களை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதமாக வாழைப்பழங்கள் வழங்கப்பட்டன. 
ஏலம்
இதையடுத்து இரவு 9 மணி அளவில் சாமிக்கு பூஜையில் வைக்கப்பட்ட பொருட்கள் ஏலம் விடும் நிகழ்ச்சி நடைபெற்றது. 
இதில் 15 கிராம் எடை உள்ள வெள்ளிமோதிரம் ரூ.62 ஆயிரத்துக்கு ஏலம் போனது. இதை கோவிலுக்கு வந்த பக்தர் ஒருவர் வாங்கினார். இதேபோல் 10 கிராம் எடை உள்ள வெள்ளி காசு ரூ.25 ஆயிரத்துக்கும், எலுமிச்சம்பழம் ஒன்று ரூ.12 ஆயிரத்து 900-க்கும் ஏலம் போனது. பூஜையில் வைக்கப்பட்ட பொருட்களை பக்தர்கள் போட்டி போட்டு ஏலம் எடுத்தனர். 
இதைத்ெ்தாடர்ந்து விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. 

மேலும் செய்திகள்