குழந்தையை கொன்று விட்டு இளம்பெண் தற்கொலை முயற்சி

அஞ்சுகிராமம் அருகே குழந்தையை கொன்று இளம்பெண் தற்கொலைக்கு முயன்றார். இதுதொடர்பாக அந்த பெண்ணின் மாமியாரிடம் விசாரணை நடந்து வருகிறது.

Update: 2021-03-13 21:19 GMT
அஞ்சுகிராமம்:
அஞ்சுகிராமம் அருகே குழந்தையை கொன்று இளம்பெண் தற்கொலைக்கு முயன்றார். இதுதொடர்பாக அந்த பெண்ணின் மாமியாரிடம் விசாரணை நடந்து வருகிறது.
இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
காதல் திருமணம் 
குமரி மாவட்டம் மயிலாடி காமராஜர் நகரை சேர்ந்தவர் ராம்குமார் (வயது 26). ராம்குமார் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் சென்னையில் ஒரு பிரபல துணிக்கடையில் டிரைவராக வேலை பார்த்தார். அப்போது, அங்கு வேலை பார்த்த கவிதா(25) என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர், இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். 
இதையடுத்து ராம்குமார் மனைவியுடன் சொந்த ஊரான மயிலாடி காமராஜர் நகருக்கு வந்து வசித்து வந்தனர். இவர்களுக்கு ஒரு வயதில் ஹரிகரன் என்ற மகன் உள்ளான். 
உடல்நலக்குறைவு
இந்தநிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன் ராம்குமார் மாலத்தீவுக்கு வேலைக்கு சென்றார். இதனால், கவிதா மாமியார் ராணி வீட்டில் மகனுடன் வசித்து வந்தார். கவிதாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகவும், குழந்தையை சரியாக பராமரிக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது.
இதன்காரணமாக அப்பகுதியில் பள்ளியில் வேலை பார்த்து வந்த ராணி அங்கு பணிக்கு செல்லாமல் குழந்தையை கவனித்து வந்தார். 
தற்கொலை முயற்சி
இந்தநிலையில் நேற்று காலை மயிலாடியில் உள்ள சந்தைக்கு ராணி காய்கறி வாங்க சென்றார். வீட்டில் கவிதா இருந்தார். குழந்தை தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தது. சந்தைக்கு சென்ற ராணி 10 மணிக்கு வீட்டுக்கு திரும்பினார். வீட்டுக்குள் நுழைந்த ராணிக்கு அங்கு அதிர்ச்சி காத்திருந்தது. வீட்டின் முன் அறையில் கவிதா சேலையில் தூக்குபோட்டு தொங்கிய நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார்.
இதைகண்டு அதிர்ச்சி அடைந்த ராணி அலறியபடி, கவிதாவின் கால்களை பிடித்து அவரை மீட்க முயன்றார். ராணியின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்களும் விரைந்து வந்து கவிதாவை மீட்டு கீழே இறக்கினர்.
அசைவற்ற நிலையில் குழந்தை
பின்னர், தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை பார்த்தனர். ஆனால், தொட்டிலில் இருந்த குழந்தை அருகில் உள்ள கட்டிலில் கிடத்தப்பட்டு இருப்பதை கண்டனர். ஆனால், குழந்தை அசைவற்ற நிலையில் இருப்பதை கண்டு சந்தேகம் அடைந்தனர். பின்னர், கவிதாவையும், குழந்தையையும் 108 ஆம்புலன்சு மூலம் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு டாக்டர்கள் இருவரையும் பரிேசாதனை செய்தனர். அப்போது, குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். அதைகேட்டு உறவினர்கள் கதறி அழுதனர். கவிதாவுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 
மாமியாரிடம் விசாரணை
மேலும், இதுபற்றி அஞ்சுகிராமம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த சுசீந்திரம் இன்ஸ்பெக்டர் காளியப்பன், அஞ்சுகிராமம் சப்-இன்ஸ்பெக்டர் ஜெசி மேனகா ஆகியோர் விரைந்து வந்து தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில், கவிதா குழந்தையின் கழுத்தை துணியால் இறுக்கி கொன்று விட்டு தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றது  தெரியவந்தது.
கவிதாவின் செல்போனை போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்து வருகிறார்கள். மேலும், கவிதா கணவருடன் பேசியபோது ஏற்பட்ட தகராறில் மனமுடைந்து இப்படி செய்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என கவிதாவின் மாமியார் ராணியையும் அழைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பரபரப்பு
இதுகுறித்து அஞ்சுகிராமம் போலீசார் குழந்தையை கொன்றதால் கவிதா மீது கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
காதல் திருமணம் செய்த இளம்பெண் குழந்தையை கொன்று விட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்