சதுரகிரியில் பக்தர்கள் சாமி தரிசனம்
மாசி அமாவாசையையொட்டி சதுரகிரியில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
வத்திராயிருப்பு,
மாசி அமாவாசையையொட்டி சதுரகிரியில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
அமாவாசை
வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது.
இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமல்லாமல் பிற மாநிலங்களிலிருந்தும் ஒவ்வொரு மாதமும் பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி ஆகிய நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிகின்றனர். இந்தநிலையில் நேற்று மாசி மாத அமாவாசையையொட்டி சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
சாமி தரிசனம்
இந்த சிறப்பு வழிபாட்டில் கலந்து கொள்ள தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே தாணிப்பாறை வனத்துறை கேட்டின் முன்பு குவிந்தனர்.
காலை 6.30 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டு மலைப்பாதை வழியாக பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய சென்றனர்.
நீரோடை பகுதிகளில் நீர்வரத்து உள்ளதால் பக்தர்கள் நீரோடை பகுதியில் கட்டியிருக்கும் கயிறை பிடித்து நீரோடை பகுதிகளை கடந்து சென்றனர்.
சிறப்பு அபிஷேகம்
வனத்துறையினர், போலீஸ் மற்றும் தீயணைப்புத்துறையினர் மலைப்பகுதியில் உள்ள நீர் ஓடை பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
அமாவாசையையொட்டி சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு 18 வகையான பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
ஏற்பாடு
பக்தர்களின் வசதிக்காக மதுரை, விருதுநகர், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய பகுதிகளில் இருந்து பஸ்கள் இயக்கப்பட்டன.
பக்தர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கோவில் பரம்பரை அறங்காவலர் ராஜா என்ற பெரியசாமி மற்றும் செயல் அலுவலர் விஸ்வநாத் ஆகியோர் செய்திருந்தனர்.