மதுரை, மார்ச்.14-
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மதுரை கலெக்டர் அலுவலகத்தில் போலீசார் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு மர்ம நபர்கள் கலெக்டர் அலுவலகத்திற்குள் புகுந்து புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டிடத்தில் கல்வீசி தாக்குதல் நடத்தி விட்டு தப்பி விட்டனர். இதில் அந்த கட்டிடத்தில் உள்ள ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து சேதம் அடைந்தன. இது குறித்து வடக்கு கிராம நிர்வாக அதிகாரி முத்துமொழி தல்லாகுளம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.