பக்தர்கள் வெள்ளத்தில் அலங்கரிக்கப்பட்ட தேர்கள் அணிவகுப்பு

ராணிப்பேட்ைட, அரக்கோணம் பகுதியில் நடந்த மயானக்கொள்ளை விழாவில் அலங்கரிக்கப்பட்ட தேர்கள் அணி வகுத்தன. பக்தர்கள் முதுகில் அலகு குத்தி தேர் இழுத்து வந்தது பரவசத்தை ஏற்படுத்தியது.

Update: 2021-03-13 18:53 GMT
ராணிப்பேட்டை

ராணிப்பேட்ைட, அரக்கோணம் பகுதியில் நடந்த மயானக்கொள்ளை விழாவில் அலங்கரிக்கப்பட்ட தேர்கள் அணி வகுத்தன. பக்தர்கள் முதுகில் அலகு குத்தி தேர் இழுத்து வந்தது பரவசத்தை ஏற்படுத்தியது.

மயானக்கொள்ளை விழா

ராணிப்பேட்டை பாலாற்றில் மயான கொள்ளை திருவிழா விமரிசையாக நடைபெற்றது.
இதனையொட்டி பக்தர்கள் கடந்த மாதம் அமாவாசை தொடங்கி, ஒரு மாத காலமாக அம்மனுக்கு காப்பு கட்டி விரதம் இருந்து வந்தனர்.

இதனை தொடர்ந்து நேற்று ராணிப்பேட்டை காரை, அம்மன் கோவில் தெரு, பழைய அஞ்சல் வீதி, பிஞ்சு ஜெயராம் நகர், முக்கியம்மன் கோவில் பகுதி, ஆகிய இடங்களிலிருந்து அம்மன் சிலைகள் அலங்கரிக்கப்பட்ட தேர்களில் வைத்து மேளதாளங்கள் முழங்கவும், பக்தி கோஷங்கள் முழங்கவும், ராணிப்பேட்டை நகரின் முக்கிய வீதிகள் வழியாக பாலாற்றிற்கு வந்து சேர்ந்தன.

இந்த ஊர்வலத்தில் பக்தர்கள் வாயிலும், உடலிலும், அலகு குத்தி, லாரிகள், கார்கள், முதலிய வாகனங்களை இழுத்து வந்தனர். வாகனங்களில் அலகு குததி அந்தரத்தில் தொங்கியவாறும் பக்தர்கள் வந்தனர். முன்னதாக சில இடங்களில் தீமிதி விழாவும் நடைபெற்றது.

தேர்கள் பாலாற்றில், அவரவர் கொடி நட்டு வைத்த இடங்களுக்கு நேற்று மாலை தொடங்கி முதல் இரவு வரை வந்து சேர்ந்தது. பின்னர் பாலாற்றில் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

நேர்த்திக்கடன்

இதில் பக்தர்கள் கொழுக்கட்டை, சுண்டல், எலுமிச்சம் பழம், முதலியவற்றை சூறை விட்டும், தேங்காய் உடைத்தும், கோழிகளை காவு கொடுத்தும் தங்களின் நேர்த்திக்கடனை செலுத்தினார்கள்.
இந்த திருவிழாவில் ராணிப்பேட்டை மட்டுமல்லாது பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் ஆயிரக்கணக்கில் கலந்து கொண்டனர். ராணிப்பேட்டை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

ராணிப்பேட்டை அருகே உள்ள அம்மூர், சிப்காட் அருகே உள்ள கவுஷிக் நகர், லாலாபேட்டை ஆகிய இடங்களிலும்,
திருவலம் பகுதியில் குப்பத்தா மோட்டூர், அம்முண்டி, மேட்டுப்பாளையம், முதலிய இடங்களிலும் மயான கொள்ளை திருவிழா நடைபெற்றது.

கலவை

கலவை அங்காளம்மன் கோவிலில் 117-ம் ஆண்டாக மயான கொள்ளை விழா நேற்று நடைபெற்றது. நேற்று காலையில் அங்காள அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் மாலை 4 மணியளவில் சிம்ம வாகனத்தில் அங்காளம்மன் தலைவிரி கோலத்துடன் சுடலை நோக்கதேர் புறப்பட்டது இதில் பக்தர்கள் பூ தேர், பூங்கரகம், கல் தேர்களில் பக்தர்கள் அம்மன் போல் வேடம் அணிந்து முதுகில் அலகு குததியும் வந்தனர். ஆடு, கோழி நேர்த்திக்கடனாக பக்தர்கள் செலுத்தினர்.

மேலும் இத்திருவிழாவை முன்னிட்டு அகில இந்திய அய்யப்ப பிரசார சபா சார்பில் பஸ் நிலையம் அருகே அன்னதானம் வழங்கப்பட்டன. மேலும் வியாபாரிகள் மோர், குளிர்பானம், அன்னதானம் வழங்கினர். பக்தர்கள் நேர்த்திக்கடனாக குழந்தை வடிவில் கொழுக்கட்டை, வேர்க்கடலை காசு மற்றும் விவசாய பொருட்கள் அம்மன் மீது வீசி நேர்த்திக்கடனை செய்தனர் இதில் பல ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.

அரக்கோணம்

அரக்கோணம் பழனிப்பேட்டையில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயான கொள்ளை திருவிழா நடந்தது. அதையொட்டி மூலவர் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. விரதம் கடைப்பிடித்த பக்தர்கள் காளி, காட்டேரி, சிவன், பார்வதி, முருகன் ஆகிய சாமி வேடமிட்டு வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பக்தர்கள் வாயில் அலகு குத்தியும், முதுகில் அலகு குத்தி அதன் மூலம் ஆட்டோைவ இழுத்து வந்தனர். பெண் பக்தர்கள் பலர் கையில் தீச்சட்டி ஏந்தி பக்தி பரவத்துடன் அருளுடன் ஆடி வந்தனர். 
கோவிலில் இருந்து பிற்பகல் 2.30 மணிக்கு அம்மன் ஊர்வலம் புறப்பட்டு மோசூர் சாலையில் உள்ள மயானத்துக்கு சென்றது. அங்கு கொள்ளையிடும் நிகழ்ச்சி நடந்தபோது, அங்காளபரமேஸ்வரி அம்மன் உற்சவர் மீது நவதானியங்கள், காய்கறிகள், உப்பு, சுண்டல், கொழுக்கட்டை, எலுமிச்சை பழம், சில்லறை காசுகள் உள்ளிட்ட பொருட்களை வீசி தங்களின் நேர்த்திக்கடனை செலுத்தினர். அம்மன் ஊர்வலம் சென்ற பாதைகளில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. 
அசம்பாவித சம்பவம் நடக்காமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. 

மேலும் செய்திகள்