போலி முகவரி கொடுத்து பாஸ்போர்ட் வாங்கிய 21 பேரை தேடப்படும் குற்றவாளிகளாக சி.பி.ஐ. கோர்ட்டு அறிவிப்பு

திண்டுக்கல்லை சேர்ந்தவர்கள் எனக்கூறி போலி முகவரி கொடுத்து, பாஸ்போர்ட் வாங்கிய 21 பேரை தேடப்படும் குற்றவாளிகளாக சி.பி.ஐ. கோர்ட்டு அறிவித்துள்ளது.

Update: 2021-03-13 16:12 GMT
திண்டுக்கல்:
தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு போலி முகவரி கொடுத்து பலர் பாஸ்போர்ட் வாங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவ்வாறு போலி முகவரி கொடுத்து பாஸ்போர்ட் பெற்ற சிலர் வெளிநாடுகளுக்கு சென்று வந்ததாகவும் தகவல் வெளியானது. 
இதையடுத்து மாநிலம் முழுவதும் போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர். அப்போது திண்டுக்கல்லை சேர்ந்தவர்கள் போன்று போலியான முகவரி கொடுத்து 21 பேர் பாஸ்போர்ட் வாங்கியது தெரியவந்தது.
அதில் பாஸ்கர், பாலகுமார், சந்திரன், வெங்கடேசன், செல்வராஜ், நாகராஜன், ராபர்டு உள்பட 21 பேரின் பெயரில் திண்டுக்கல் அங்குவிலாஸ் இறக்கம், அசனாத்புரம், அழகர்தெரு, அரசமரத்தெரு, பொன்னு கொத்தனார் தெரு ஆகிய பகுதிகளின் முகவரியை கொடுத்து பாஸ்போர்ட் பெறப்பட்டு இருந்தது.
இதைத்தொடர்ந்து போலி முகவரி கொடுத்து பாஸ்போர்ட் பெற்றவர்களை கைது செய்வதற்கு விசாரணை முடுக்கி விடப்பட்டது. இதுதொடர்பாக முதலில் போலீசாரும், பின்னர் சி.பி.ஐ.யும் விசாரணை நடத்தியது. ஆனால், போலி முகவரி கொடுத்தவர்கள் போலீசாரிடம் சிக்கவில்லை.
இதற்கிடையே போலி முகவரி மூலம் பாஸ்போர்ட் பெற்ற வழக்கு சி.பி.ஐ. கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. ஆனால், குற்றம் சாட்டப்பட்டவர்கள் யாரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படாததால் 21 பேரும் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்