தேசிய அளவிலான தடகள போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற மாணவருக்கு பாராட்டு

தேசிய அளவிலான தடகள போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற நீலகிரி மாவட்டம் மாணவருக்கு கல்லூரி முதல்வர், உடற்கல்வி பயிற்றுநர்கள் மற்றும் பேராசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Update: 2021-03-13 14:36 GMT
ஊட்டி,

கேரள மாநிலம் கோழிக்கோடு பல்கலைக்கழகம் சார்பில் தேசிய அளவிலான தடகள போட்டி, கோழிக்கோட்டில் நடைபெற்றது. போட்டியில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, பீகார் உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து 400-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். 

கொரோனா பரிசோதனைக்கு பிறகு வீரர்கள் போட்டிக்கு அனுமதிக்கப்பட்டனர். இதில் நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் பி.காம். 2-ம் ஆண்டு படித்து வரும் சுருதனும் பங்கேற்றார். அவர் 10 ஆயிரம் மீட்டர் ஓட்ட பந்தயத்தில் 2-வது இடம் பிடித்தார். 

அந்த தூரத்தை 30 நிமிடங்கள் 46 நொடிகளில் கடந்தார். அவருக்கு வெள்ளி பதக்கம், சான்றிதழ் வழங்கப்பட்டது. அவர் ஊட்டி எச்.ஏ.டி.பி. விளையாட்டு மைதானத்தில் பயிற்சி மேற்கொண்டவர் ஆவார். தேசிய அளவிலான தடகள போட்டியில் 2-வது இடம் பிடித்த மாணவருக்கு கல்லூரி முதல்வர் ஈஸ்வரமூர்த்தி, உடற்கல்வி பயிற்றுநர்கள் மற்றும் பேராசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்