புதிய வாக்காளர்கள் அடையாள அட்டை பதிவிறக்க சிறப்பு முகாம்
அடையாள அட்டை பதிவிறக்க சிறப்பு முகாம்
உடுமலை
உடுமலையில் மின்னணு வாக்காளர் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்து கொள்வதற்கான சிறப்பு முகாம் தொடங்கியது.
புதிய வாக்காளர்கள்
தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி புதிய வாக்காளர்கள் தங்களுக்குரிய மின்னணு வாக்காளர் அடையாள அட்டையை https://www.nvsp.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி அனைத்து வாக்குச்சாவடி அமைவிடங்களிலும் நேற்று மற்றும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 2 நாட்கள் சிறப்பு முகாம் நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி இந்த புதிய வாக்காளர்கள் தங்களது மின்னணு வாக்காளர் அட்டையை செல்போன் மற்றும் கணினியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
சிறப்பு முகாம்கள்
உடுமலை சட்ட மன்றத்தொகுதியில் 293 வாக்குச்சாவடிகளும், 87 துணை வாக்குச்சாவடிகளும் என மொத்தம் 380 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வாக்குச்சாவடிகள் 131 அமைவிடங்களில் உள்ளது. இந்த வாக்குச்சாவடி அமைவிடங்களில் நேற்று சிறப்பு முகாம் தொடங்கியது. இந்த முகாம்களில் பணியாளர்கள், புதியதாக வாக்காளர் பட்டியலுடன் பணியில் இருந்தனர். அவர்கள் அந்த பட்டியலில் உள்ள புதிய வாக்காளர்களின் செல்போன் எண்களுக்கு போன் செய்து மின்னணு வாக்காளர் அடையாள அட்டை பெறுவதற்கான சிறப்பு முகாம் நடைபெறுவது குறித்து தகவல் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து முதல் முறையாக வாக்களிக்க உள்ள புதிய வாக்காளர்கள் சிறப்பு முகாம் நடந்த வாக்குச்சாவடி அமைவிடங்களுக்கு வந்தனர். அவர்களுக்கு மின்னணு வாக்காளர் அடையாள அட்டைக்காக செல்போனில் பதிவிறக்கம் செய்வது எப்படி? என்பது குறித்து செயல்விளக்கமளித்தனர். பதிவிறக்கம் செய்தும் கொடுத்தனர். சிலர் செல்போன் மூலமாக கேட்டறிந்து பதிவிறக்கம் செய்து கொண்டனர்.
தாசில்தார் ஆய்வு
உடுமலையில் தளி சாலையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் நடந்த சிறப்பு முகாமை உடுமலை சட்ட மன்றத்தொகுதி உதவித்தேர்தல் நடத்தும் அலுவலரான தாசில்தார் வி.ராமலிங்கம், தேர்தல் துணை தாசில்தார் கே.கிருஷ்ணவேணி, நில வருவாய் ஆய்வாளர் ரஞ்சித்குமார், மற்றும் பாலாஜி உள்ளிட்டவர்கள் ஆய்வு செய்தனர். இந்த சிறப்பு முகாம் இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.