சென்னையில் இருந்து சேலத்துக்கு கொண்டு வரப்பட்ட ரூ.36½ கோடி தங்க நகைகள் பறிமுதல் - தலைவாசல் அருகே நள்ளிரவில் பரபரப்பு

சென்னையில் இருந்து சேலத்துக்கு கொண்டு வரப்பட்ட ரூ.36½ கோடி மதிப்பிலான தங்க நகைகள் தலைவாசல் அருகே வாகன சோதனையின் போது பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2021-03-13 02:17 GMT
சேலம்,

தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்க பறக்கும்படையினர் சேலம் மாவட்டத்தில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள மும்முடி சோதனைச்சாவடி பகுதியில் நேற்று நள்ளிரவு நிலை கண்காணிப்பு குழு அதிகாரியும், தலைவாசல் வட்டார வளர்ச்சி அலுவலருமான சந்திரசேகரன் தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமசாமி, ஏட்டுகள் வெங்கடேசன், ராதா மற்றும் போலீசார், அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
ரூ.36½ கோடி தங்க நகைகள்
அப்போது சென்னையில் இருந்து சேலம் நோக்கி ஒரு வேன் வந்து கொண்டிருந்தது. அந்த வேனை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். பின்னர் வேனில் இருந்த டிரைவர் உள்பட 2 பேரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதில், வேனுக்குள் ரூ.36½ கோடி மதிப்பிலான 234 கிலோ தங்கநகைகள் இருந்தது தெரியவந்தது.
மேலும் இந்த தங்க நகைகள் சென்னையில் உள்ள ஒரு பிரபல நகைக்கடையில் இருந்து சேலத்துக்கு கொண்டு வரப்பட்டதும் தெரியவந்தது. இந்த நகைகளுக்கான உரிய ஆவணங்கள் அவர்களிடம் இல்லை. இதனால் அந்த தங்க நகைகளுடன் வந்த வேனை அதிகாரிகள் பறிமுதல் செய்து கெங்கவல்லி தாலுகா அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர்.
பரபரப்பு
ரூ.36½ கோடி மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக மாவட்ட கலெக்டர் ராமன் மற்றும் கெங்கவல்லி தாசில்தார் வெங்கடேசனுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. 
மேலும் இந்த தங்கம் தொடர்பாக வேனில் வந்தவர்களிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். வாகன சோதனையின் போது நள்ளிரவில் ரூ.36½ கோடி மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்