கோவை விமான நிலையத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு

கோவை வந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Update: 2021-03-13 02:14 GMT
கோவை,

தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந் தேதி நடை பெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 25 நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி மற்றும் தொகுதிபங்கீட்டை இறுதி செய்து வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன.

குறிப்பாக அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. கட்சிகள் கூட்டணி அமைத்து  தேர்தலை சந்திக்கின்றன. இந்த நிலையில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர் களை ஆதரித்து சேலம் மாவட்டம் ஏற்காடு, கெங்கவல்லி, ஆத்தூர் ஆகிய தொகுதிகளில் நேற்று முதல் பிரசாரத்தை தொடங்கினார்.

முன்னதாக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று மதியம் 3.05 மணியளவில் கோவை விமானநிலையம் வந்தார். அவருடன் தம்பிதுரை எம்.பி. வந்து இருந்தார். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு விமான நிலையத்தில் அ.தி.மு.க. சார்பில் மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதில் எம்.எல்.ஏ.க்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், அம்மன்அர்ச்சுனன், ஓ.கே.சின்னராஜ், வி.பி.கந்தசாமி மற்றும் சிங்காநல்லூர் தொகுதி வேட்பாளர் கே.ஆர்.ஜெயராமன், மேட்டுப்பாளையம் தொகுதி வேட்பாளர் ஏ.கே.செல்வராஜ் உள்பட திரளானவர்கள் கலந்துகொண்டு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பூங்கொத்து கொடுத்தும், பொன்னாடை அணிவித்தும் வரவேற்பு அளித்தனர். 

வரவேற்பை முடித்துக்கொண்டு 3.25 மணியளவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கார் மூலம் சாலை மார்க்கமாக சேலம் புறப்பட்டு சென்றார். முதல்-அமைச்சர் வருகையையொட்டி கோவை விமானநிலையம் மற்றும் மாவட்ட எல்லை வரை பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

மேலும் செய்திகள்