மகாலிங்கசாமி கோவிலில் நாட்டியாஞ்சலி விழா

திருவிடைமருதூர் மகாலிங்கசாமி கோவிலில் நாட்டியாஞ்சலி விழா நடைபெற்றது. இதில் 300-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் கலந்து கொண்டனர்.

Update: 2021-03-12 21:07 GMT
திருவிடைமருதூர்;
திருவிடைமருதூர் மகாலிங்கசாமி கோவிலில் நாட்டியாஞ்சலி விழா நடைபெற்றது. இதில் 300-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் கலந்து கொண்டனர். 
சிவராத்திரி 
கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூரில் பிரசித்தி பெற்ற  மகாலிங்க சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் சிவராத்திரி விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வது வழக்கம்.  நேற்று முன்தினம் சிவராத்திரி விழாவையொட்டி  மாலை 6 மணி முதல் தொடர்ந்து 4 கால பூஜைகளும்  விநாயகர் மகாலிங்க சுவாமி அம்பாள் பிரகத் சுந்தர குஜாம்பிகை உள்ளிட்ட மூலவர்களுக்கு பால், தயிர், சந்தனம் மற்றும் வாசனை திரவியங்கள் கொண்டு மகா அபிஷேகம் செய்யப்பட்டு மலர் அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகள் நடந்தது. 
300-க்கும் மேற்பட்ட கலைஞர்கள்
பின்னர் மருதா நாட்டியாஞ்சலி குழுவினரின் 10-ம் ஆண்டு மகா நாட்டியாஞ்சலி நடந்தது.  நிகழ்ச்சியை திருவாவடுதுறை ஆதீனம் கட்டளை ஸ்தானிகம் அம்பலவாண தேசிக பராமாச்சாரிய சுவாமிகள்  குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். அர்ச்சனா நாராயணமூர்த்தி பரதநாட்டியத்துடன் விழா தொடங்கியது. இதில் தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட பரத கலைஞர்கள் பங்கேற்ற பரதநாட்டிய நிகழ்ச்சி விடிய விடிய நடைபெற்றது. இதை ஏராளமான பக்தர்கள் கண்டுகளித்தனர்.
விழாவில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் மாலை 5 மணி முதல் விடிய விடிய கோவிலில் வழிபாடு நடத்தினர். விழா ஏற்பாடுகளை ஆலய கண்காணிப்பாளர் கண்ணன் மற்றும் மருதா நாட்டியாஞ்சலி குழுவினர், ஆலய பணியாளர்கள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்