கரூர் மாவட்டத்தில் 3 சட்டமன்ற தொகுதிகளில் அ.ம.மு.க. போட்டி

கரூர் மாவட்டத்தில் 3 சட்டமன்ற தொகுதிகளில் அ.ம.மு.க. போட்டியிடுகிறது.

Update: 2021-03-12 19:01 GMT
கரூர்
வேட்பாளர்கள்
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் நேற்று மாலை 3-வது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. இதில், கரூர் மாவட்டத்தில் கரூர், குளித்தலை, அரவக்குறிச்சி ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளில் அ.ம.மு.க. வேட்பாளர்கள் போட்டுயிடுகின்றனர்.
கே.கே.பாலசுப்பிரமணியம்
கரூர் சட்டமன்ற தொகுதி அ.ம.மு.க. வேட்பாளராக கரூர் காந்தி கிராமத்தை சேர்ந்த கே.கே.பாலசுப்பிரமணியம் போட்டியிடுகிறார். இவருக்கு 50 வயதாகிறது. 1989-ம் ஆண்டு முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா சேவல் சின்னத்தில் போட்டியிடும்போது மாணவர் அணி பொறுப்பில் இருந்தார். 1996-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரை பாகநத்தம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவராக இருந்துள்ளார். தற்போது அ.ம.மு.க.வில் கரூர் தெற்கு நகர செயலாளராக உள்ளார். இவருக்கு லதா என்ற மனைவியும், பிரணவ் சங்கர் என்ற மகனும் உள்ளனர்.
பி.எஸ்.என்.தங்கவேல்
அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி அ.ம.மு.க. வேட்பாளராக அரவக்குறிச்சி தாலுகா, வெஞ்சமாங்கூடலூர் மேல்பாகம் ஊராட்சி பாரப்பட்டியை சேர்ந்த பி.எஸ்.என். தங்கவேல் அறிவிக்கப்பட்டுள்ளார். இவருக்கு 54 வயதாகிறது. பி.டெக். படித்துள்ளார். 1985-ம் ஆண்டு முதல் அ.தி.மு.க. உறுப்பினராகவும், ஊராட்சி செயலாளராகவும் இருந்தார். அ.ம.மு.க. தொடங்கியதில் இருந்து கரூர் மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளராக உள்ளார். தற்போது கரூர் மாவட்ட செயலாளராக உள்ளார். 2019-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் கரூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தவர். இவரது பெற்றோர் பி.எஸ்.நல்லசாமி- ந.ராசம்மாள். இவருக்கு பிரபா என்ற மனைவியும், காருண்யா என்ற மகளும், கார்த்திகேயன் என்ற மகனும் உள்ளனர்.
வி.நிரோஷா
குளித்தலை சட்டமன்ற தொகுதி அ.ம.மு.க. வேட்பாளராக வலையப்பட்டியை சேர்ந்த வி.நிரோஷா அறிவிக்கப்பட்டுள்ளார். இவருக்கு 32 வயதாகிறது. 10-ம் வகுப்பு வரை படித்த இவர்,  கரூர் கிழக்கு மாவட்ட துணை செயலாளராக உள்ளார். இவருக்கு வெங்கடேஷ் என்ற கணவரும், சக்ரேஷ், கேமேஷ் என்ற 2 மகன்கள் உள்ளனர்.

மேலும் செய்திகள்