வெள்ளகோவில் வீரக்குமாரசாமிகோவில் 2-வது நாள் தேரோட்டம் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
வெள்ளகோவில் வீரக்குமாரசாமி கோவில் 2-வதுநாள் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
வெள்ளகோவில்,
திருப்பூர் மாவட்டத்தில் வெள்ளகோவிலில் மிகவும் பிரசித்தி பெற்ற வீரக்குமாரசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் வீரக்குமாரசாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி மகா சிவராத்திரியை முன்னிட்டு தேர்த்திருவிழா சிறப்பாக நடைபெறும். அப்போது தேரோட்டம் 3 நாட்களுக்கு நடைபெறும்.
இந்த ஆண்டு கொரோனா தொற்று பரவல் இருப்பதால் 2 நாள் மட்டும் தேரோட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து கடந்த மாதம் 22-ந் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. கடந்த 5-ந் தேதி தேரில் கலசம் வைத்து பூஜை செய்யப்பட்டது. நேற்றுமுன்தினம் காலை செல்லாண்டியம்மன் கோவில் மற்றும் சோழீஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜையும், பிற்பகல் 3 மணிக்கு பள்ளய பூஜை நடைபெற்றது. பின்னர் மாலை 4.30 மணிக்கு மேல் வீரக்குமாரசாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு சாமி தேரில் எழுந்தருளினார். பின்னர் கோவில் குலத்தவர்கள், பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். சிறிது தூரம் தேர்
சென்றதும் தேர் நிறுத்தப்பட்டது.
2-வது நாள் தேரோட்டம்
இந்த நிலையில் நேற்று மாலை 4.30 மணிக்கு மேல் 2-வது நாள் தேரோட்டம் நடைபெற்றது. அதன் பின்னர் தேர் நிலை சேர்ந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் சாமி தேர் கால் பவனி, தேவஸ்தான மண்டப கட்டளை நடைபெற்றது. இன்று (சனிக்கிழமை) முதல் 25-ந்தேதி வரை கோவில் குலத்தவர்களின் மண்டப கட்டளை நடைபெற உள்ளது. திருவிழாவில் முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் எஸ்.என்.முத்துக்குமார், கோவில் முதன்மை காரர்கள் நற்பணி மன்ற தலைவர் என்.டி.பாலசுப்பிரமணியன், முன்னாள் அறங்காவலர்கள் வி.ஜி.ராமசாமி, எஸ்.கே.குனசேகர், ஜெ.சுந்தரவடிவேல், கே. குமாரசாமி, மணி, உள்பட கோவில் குலத்தவர்கள், பொதுமக்கள் அரசியில் பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இந்த திருவிழா ஏற்பாடுகளை கோவில் குலத்தவர்கள், கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.