கரும்பு தோட்டத்தில் மூதாட்டியை தாக்கி நகை பறித்த தொழிலாளி கைது தாராபுரம் அருகே பரபரப்பு சம்பவம்
தாராபுரம் அருகே மூதாட்டியை கரும்பு தோட்டத்திற்குள் தள்ளி, அவரை தாக்கி நகையை பறித்து சென்ற தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
தாராபுரம்
தாராபுரம் அருகே மூதாட்டியை கரும்பு தோட்டத்திற்குள் தள்ளி, அவரை தாக்கி நகையை பறித்து சென்ற தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
மூதாட்டி
இந்த சம்பவம் குறித்து அலங்கியம் போலீசார் தரப்பில் கூறப்படுவதாவது:-
தாராபுரம் அருகே உள்ள சோமனூத்தை சேர்ந்தவர் குமரவேல். விவசாயி. இவரது மனைவி மீனம்மாள் (வயது 80.) இவர்களுக்கு வீட்டின் அருகில் தோட்டம் உள்ளது. அந்த தோட்டத்தில் கரும்பு சாகுபடி செய்துள்ளனர்.
கரும்பு தோட்டத்திற்கு தினமும் காலை மற்றும் மாலை ஆகிய 2 வேளைகளிலும் மீனம்மாள் சென்று வருவார். இந்த நிலையில் வழக்கம்போல நேற்றுமுன்தினம் மாலை 5 மணிக்கு மீனம்மாள் கரும்பு தோட்டத்திற்கு சென்றார். இதனை நோட்டமிட்டு வந்த அதே பகுதி ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்த தங்கவேல் (55) என்பவர் மூதாட்டியின் பின்னால் சென்றுள்ளார்.
நகைப்பறிப்பு
அப்போது மீனம்மாள் பின் தொடர்ந்து வந்தவரை யாரென்று கேட்டபோது தங்கவேல் திடீரென்று மீனம்மாளை கரும்பு தோட்டத்திற்குள் தள்ளி, வாயில் துணியை வைத்து திணித்து, அவரை தாக்கி உள்ளார். இதில் மீனம்மாள் மயக்கம் அடைந்தார். பின்னர் சிறிது நேரத்தில் மயக்கம் தெளிந்து எழுந்து பார்த்தபோது மீனாம்மாள் அணிந்து இருந்த 1½ பவுன் நகையை காணவில்லை. அந்த நகையை தங்கவேல் பறித்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து மீனம்மாள் கூச்சலிட்டார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் ஓடிச்சென்று மீனம்மாளை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தாராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் நமது ஊரைச்சேர்ந்த கூலி தொழிலாளி தங்கவேல், தன்னை தாக்கி நகையை பறித்து சென்றதாக தெரிவித்தார். இதில் ஆத்திரமடைந்த உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் தங்கவேலுவை தேடிப்பிடித்து சரமாரியாக தாக்கினர். பிறகு அவரை அலங்கியம் போலீசில் ஒப்படைத்தனர். இதில் பலத்த காயமடைந்த தங்கவேலுவையும் தாராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இச்சம்பவம் குறித்து அலங்கியம் போலீசார் தங்கவேல் மீது வழக்குப்பதிவு , அவரை கைது செய்தனர். தாராபுரம் பகுதியில் மூதாட்டியை கரும்பு தோட்டத்தில் தள்ளி, நகையை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.