சென்னை விமான நிலையத்தில் ரூ.65¾ லட்சம் தங்கம், செல்போன், கைக்கெடிகாரங்கள் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட மொத்தம் ரூ.65 லட்சத்து 70 ஆயிரம் மதிப்புள்ள தங்கம், செல்போன்கள், கைக்கெடிகாரங்கள், சிகரெட்டுகள் ஆகியவற்றை சுங்க இலாகா அதிாரிகள் பறிமுதல் செய்தனர்.

Update: 2021-03-12 11:28 GMT
ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து சிறப்பு விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரி தலைமையிலான சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர்.

அப்போது ராமநாதபுரத்தைச் சேர்ந்த ராஜா முகமது (வயது 42) என்பவரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரித்தனர். அதிகாரிகளிடம் அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவரது உடைமைகளை சோதனை செய்தனர்.

அதில் ரூ.13 லட்சத்து 70 ஆயிரம் மதிப்புள்ள விலை உயர்ந்த செல்போன்கள், டிஜிட்டல் கைக்கெடிகாரங்கள், சிகரெட்டுகள் இருந்தன. பின்னர் ராஜா முகமதை தனியறைக்கு அழைத்துச்சென்று சோதனை செய்தனர்.

அப்போது அவரது உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்து ரூ.52 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ 120 கிராம் தங்கத்தையும் சுங்க இலாகா பறிமுதல் செய்தனர்.

அவரிடம் இருந்து மொத்தம் ரூ.65 லட்சத்து 70 ஆயிரம் மதிப்புள்ள தங்கம், செல்போன்கள், கைக்கெடிகாரங்கள், சிகரெட்டுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிாரிகள், இது தொடர்பாக ராஜா முகமதை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்