அ.தி.மு.க. வேட்பாளருக்கு எதிர்ப்பு: சேந்தமங்கலம் தொகுதியில் சுயேச்சையாக போட்டி; சந்திரசேகரன் எம்.எல்.ஏ. அறிவிப்பால் பரபரப்பு
சேந்தமங்கலத்தில் அ.தி.மு.க. வேட்பாளருக்கு எதிர்ப்பு தெரிவித்து, சந்திரசேகரன் எம்.எல்.ஏ. சுயேச்சையாக போட்டியிடப்போவதாக அறிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சேந்தமங்கலம்,
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந் தேதி நடக்கிறது. இதனால் கட்சிகள் தங்களது வேட்பாளர்களை போட்டிப்போட்டு அறிவித்து வருகிறார்கள். இதனிடையே நேற்று முன்தினம் அ.தி.மு.க.வினரின் 2-வது கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், நாமக்கல் மாவட்டத்தில் அமைச்சர்களான தங்கமணி, டாக்டர் சரோஜா மற்றும் எம்.எல்.ஏ.க்களான கே.பி.பி.பாஸ்கர், பொன் சரஸ்வதி ஆகியோருக்கு மீண்டும் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது.
ஆனால் சேந்தமங்கலம் தனி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் தற்போது எம்.எல்.ஏ.வாக உள்ள சந்திரசேகரனுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. இந்த தொகுதி கொல்லிமலை வாழவந்திநாடு ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் சந்திரனுக்கு ஒதுக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று கொல்லிமலை கெம்மேடு பகுதியில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் நேற்று சந்திரசேகரன் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நான் சேந்தமங்கலம் தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் மக்கள் நலத்திட்டங்களை சிறப்பாக செய்துள்ளேன். அ.தி.மு.க. சார்பில் தற்போது வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர் மீது மரம் கடத்தல் உள்பட பல்வேறு புகார்கள் உள்ளன. அவர் ஜெயலலிதா நினைவு நாள் நிகழ்ச்சி உள்பட எந்தவொரு கட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பது கிடையாது. எனக்கு போட்டியிட சீட் மறுக்கப்பட்டுள்ளதால் கட்சியினர் வேதனை அடைந்துள்ளனர். எனவே தலைமை அறிவித்த வேட்பாளரை மாற்ற பரிசீலனை செய்ய வெண்டும். சில தினங்களில் அவரை மாற்றாவிட்டால் இந்த தொகுதியில் நான் சுயேச்சையாக போட்டியிடுவது உறுதி. இவ்வாறு சந்திரசேகரன் எம்.எல்.ஏ. கூறினார்.