சென்னைக்கு குடிநீ்ர் வழங்குவதற்காக அமைக்கப்பட்ட கண்ணன்கோட்டை நீர்த்தேக்கம் முழு கொள்ளளவை எட்டியது
சென்னைக்கு குடிநீ்ர் வழங்குவதற்காக அமைக்கப்பட்ட கண்ணன்கோட்டை நீர்த்தேக்கம் தனது முழு கொள்ளளவை எட்டியது.
ஊத்துக்கோட்டை,
பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகளில் சேமித்து வைக்கப்படும் தண்ணீரை கொண்டு சென்னை நகர மக்களின் குடிநீர்த் தேவை நிறைவேற்றப்படுகிறது. இந்த 4 ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11.05 டி.எம்.சி. ஆகும். கோடை காலங்களில் இந்த ஏரிகள் வற்றி விடுவதால் சென்னையில் கடும் குடிநீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே உள்ள கண்ணன்கோட்டை- தேர்வாய் கண்டிகை ஏரிகளை ஒன்றிணைத்து 1,486 ஏக்கர் நிலப்பரப்பில் நீர்த்தேக்கம் அமைக்க ரூ.380 கோடி நிதி ஒதுக்கினார்.
இந்த நிதியை கொண்டு நீர்த்தேக்கம் கட்டுமானப்பணிகள் 2013-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. 7 ஆண்டுகள் நடைபெற்ற கட்டுமான பணிகள் முடிவடைந்ததால் கடந்த நவம்பர் மாதம் 21-ந்தேதி சென்னையில் நடைபெற்ற விழாவில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இந்த நீர்த்தேக்கத்தை காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
இந்த நீர்த்தேக்கத்தில் கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி கண்டலேறு அணையில் இருந்து பூண்டிக்கு வந்து சேரும் தண்ணீர் மற்றும் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் சத்தியவேடு காட்டில் பாயும் ஓடைகளின் தண்ணீரை சேமித்து வைப்பர்.
அதன்படி இந்த நீர்த்தேக்கத்தில் 500 மில்லியன் கனஅடி தண்ணீரை சேமித்து சேமிக்கலாம். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பெய்த மழை காரணமாக நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. மழை நின்ற பின்னரும் கிருஷ்ணா தண்ணீர் தொடர்ந்து வந்து கொண்டிருப்பதால் நேற்று நீர்த்தேக்கம் முதல் முறையாக தனது முழு கொள்ளளவை எட்டியது.
இதனையடுத்து கிருஷ்ணா தண்ணீரை நிறுத்தும்படி பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெலுங்கு கங்கை திட்ட அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியுள்ளனர். சென்னைக்கு 5-வது குடிநீர் ஆதாரமாக விளங்கும் இந்த நீர்த்தேக்கம் தற்போது குடிநீர் வினிியோகம் செய்ய தயார் நிலையில் உள்ளது.