அவினாசி தொகுதியை ஆதித்தமிழர் பேரவைக்கு ஒதுக்கியதற்கு எதிர்ப்பு அன்னூரில் திமுகவினர் சாலை மறியல்
அவினாசி தொகுதியை ஆதித்தமிழர் பேரவைக்கு ஒதுக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அன்னூரில் தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அன்னூர்,
தமிழகத்தில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. அதற்கான அனைத்து பணிகளும் தீவிரமாக நடந்து வருகின்றன. கட்சிகளுக்கும் தொகுதி பங்கீடு வழங்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் தி.மு.க. கூட்டணியில் உள்ள ஆதித்தமிழர் பேரவைக்கு அவினாசி தொகுதி ஒதுக்கப்பட்டு உள்ளது. அதன் நிறுவனர் அதியமான் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார்.
இதற்கிடையே அவினாசி தொகுதியை ஆதித்தமிழர் பேரவைக்கு ஒதுக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அந்த தொகுதியை தி.மு.க. வுக்கு ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தி அந்த தொகுதிக்கு உட்பட்ட அன்னூர் பஸ்நிலையம் அருகே தி.மு.க.வினர் திடீரென்று மறியலில் ஈடுபட்டனர்.
இதில் கலந்து கொண்டவர்கள் தி.மு.க. கொடிகளை ஏந்தியபடி தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
இந்த மறியலில் அன்னூர் வடக்கு ஒன்றியத்தை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்த அன்னூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, போராட்டத்தில் ஈடுபட்டவர் களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதில் முடிவு ஏற்பட்டதை தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறும்போது, அவினாசி தொகுதியில் தி.மு.க.வுக்கு வெற்றிவாய்ப்பு அமோகமாக உள்ளது. எனவே இந்த தொகுதியை உடனடியாக தி.மு.க.வுக்கு ஒதுக்க வேண்டும் என்றனர்.