ஈரோடு கருங்கல்பாளையம் சந்தைக்கு வெளிமாநில வியாபாரிகள் வரவில்லை
ஈரோடு கருங்கல்பாளையம் சந்தைக்கு வெளிமாநில வியாபாரிகள் வரவில்லை.
ஈரோடு
ஈரோடு கருங்கல்பாளையத்தில் உள்ள மாட்டுச்சந்தை வாரம்தோறும் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் நடந்து வருகிறது. அதன்படி நேற்று முன்தினம் நடந்த சந்தைக்கு, 100 வளர்ப்பு கன்றுக்குட்டிகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில் கன்றுக்குட்டி ஒன்று ரூ.10 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை விற்பனை ஆனது.
நேற்று வழக்கமான சந்தை கூடியது. இதற்கு 400 பசு மாடுகள், 200 எருமை மாடுகள் என மொத்தம் 600 மாடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. இதில் எருமை மாடு ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.25 ஆயிரத்துக்கும், அதிகபட்ச விலையாக ரூ.50 ஆயிரத்துக்கும், பசு மாடு ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.30 ஆயிரத்துக்கும், அதிகபட்ச விலையாக ரூ.70 ஆயிரத்துக்கும் விற்பனை ஆனது.
இதுகுறித்து சந்தை நிர்வாகிகள் கூறும்போது, ‘கொரோனா வைரஸ் தாக்கம் மற்றும் சட்டமன்ற தேர்தல் காரணமாக கேரளா, மராட்டியம், கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு வெளி மாநில வியாபாரிகள் கருங்கல்பாளையம் சந்தைக்கு வரவில்லை. இதன் காரணமாக மாடுகள் விற்பனை மந்தமானது’ என்றனர்.