பர்கூர் வனப்பகுதியில் காணப்படும் அரிய வகை நட்சத்திர ஆமைகள்
பர்கூர் வனப்பகுதியில் அரிய வகை நட்சத்திர ஆமைகள் காணப்படுகின்றன.
அந்தியூர்
பர்கூர் வனப்பகுதியில் அரிய வகை நட்சத்திர ஆமைகள் காணப்படுகின்றன.
நட்சத்திர ஆமைகள்
உலகில் அழிந்து வரும் நிலையில் நட்சத்திர ஆமைகள் உள்ளன. குறிப்பாக இந்த நட்சத்திர ஆமைகள் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் அதிக அளவில் காணப்படுகிறது. இந்த ஆமைகள் புதர் காடுகளில் அதிக அளவில் உயிர் வாழ்கின்றன. அழிந்து வரும் நிலையில் உள்ள இந்த நட்சத்திர ஆமைகளை பாதுகாக்கப்பட்ட உயிரினமாக இந்தியா அறிவித்து உள்ளது.
இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் அந்தியூரை அடுத்த பர்கூர் வனப்பகுதியில் நட்சத்திர ஆமைகள் காணப்படுகின்றன.
தொடர் கண்காணிப்பு
அந்தியூரை அடுத்த பர்கூர் மலைப்பகுதியானது மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ளது. இங்கு புலி, சிறுத்தை, யானை, கரடி, மான், செந்நாய் போன்ற வனவிலங்குகள் அதிக அளவில் வசித்து வருகின்றன. இதனுடன் அரிய வகை உயிரினமான நட்சத்திர ஆமைகளை இங்குள்ள ஒரு வனக்குட்டையில் உள்ளதை கண்டதும் வனத்துறையினருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இங்கு 10-க்கும் மேற்பட்ட நட்சத்திர ஆமைகள் வசித்து வருகின்றன.
இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், ‘பர்கூர் மலைப்பகுதியில் உள்ள வனக்குட்டைக்கு எப்படி நட்சத்திர ஆமைகள் வந்தது என்பது தெரியவில்லை. எனினும் நாங்கள் நட்சத்திர ஆமைகளை பாதுகாக்க தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறோம்,’ என்றனர்.