மானூர் அருகே பறக்கும் படை வாகன சோதனை: அ.தி.மு.க. நிர்வாகியிடம் ரூ.77 ஆயிரம் சிக்கியது வழக்கு பதிந்து போலீஸ் விசாரணை
மானூர் அருகே தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில், அ.தி.மு.க. நிர்வாகியிடம் ரூ.77 ஆயிரம் சிக்கியது. இதையடுத்து அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மானூர்:
மானூர் அருகே தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில், அ.தி.மு.க. நிர்வாகியிடம் ரூ.77 ஆயிரம் சிக்கியது. இதையடுத்து அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாகன சோதனை
நெல்லை மாவட்டம் மானூர் அருகே பிள்ளையார்குளம் விலக்கு பகுதியில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் முத்துராஜா தலைமையிலான குழுவினர் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த காரை வழிமறித்து சோதனை செய்தனர்.
இதில், காரை ஓட்டி வந்தவர் தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே வல்லம் பகுதியைச் சேர்ந்த அ.தி.மு.க. ஒன்றிய பிரதிநிதி அங்கராஜ் (வயது 43) என்பதும், உரிய ஆவணம் இல்லாமல் ரூ.77 ஆயிரம் எடுத்து சென்றதும் தெரியவந்தது. அவரிடம் அ.தி.மு.க. வாக்குசாவடி பொறுப்பாளர்கள் பட்டியலும் இருந்தது.
ரூ.77 ஆயிரம் பறிமுதல்
இதையடுத்து அங்கராஜிடம் இருந்த ரூ.77 ஆயிரம் மற்றும் காரை பறிமுதல் செய்த அதிகாரிகள், மானூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, அங்கராஜிடம் விசாரணை நடத்தினர். பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை கருவூல அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.