தார் சாலை அமைக்க கோரி பொதுமக்கள் மறியல்
வி.கைகாட்டியில் தார் சாலை அமைக்க கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வி.கைகாட்டி:
சாலை பணிகள்
அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டியில் திருச்சி- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை மற்றும் அரியலூர்-ஸ்ரீபுரந்தான் சாலை மிக முக்கிய சாலைகளாக விளங்கி வருகின்றன. இப்பகுதியில் தினமும் நூற்றுக்கணக்கான டிப்பர் லாரிகள் சென்று வருகின்றன. மேலும் இந்த சாலை வழியாக திருச்சி, கோவை, திருப்பூர், மதுரை, சென்னை, புதுச்சேரி, தஞ்சாவூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு அதிவிரைவு பஸ்களும் தினமும் சென்று வருகின்றன.
திருச்சி-சிதம்பரம் சாலை விரிவாக்கத்திற்கான முதற்கட்ட பணிகள் கடந்த 2019-ம் ஆண்டில் மே மாதம் முதல் தொடங்கியது. இதில் கல்லகம் கேட் முதல் மீன்சுருட்டி வரை சுமார் ரூ.1000 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடந்து வருகின்றன.
புழுதியால் அவதி
இதையொட்டி தேளூர், ரெட்டிப்பாளையம் ஊராட்சிகளுக்கு உட்பட்ட வி.கைகாட்டியில் மேம்பால பணி கடந்த ஒரு வருடமாக நடந்து வருகிறது. இதற்காக சாலையின் இருபுறமும் அணுகு சாலை தற்காலிகமாக அமைக்கப்பட்டது. அந்த சாலை சேதமடைந்துள்ளது. இந்த சாலையில் ஒப்பந்த பணியாளர்களை கொண்டு டேங்கர் லாரி மூலம் தண்ணீர் அவ்வப்போது தெளித்து வந்தனர். தற்போது தண்ணீர் தெளிக்காததால் சாலையில் கனரக வாகனங்கள் செல்லும் அப்பகுதியே புழுதி மண்டலமாக காட்சியளிக்கிறது.
ஒரு சிலருக்கு புழுதியை சுவாசிக்கும்போது முச்சுதிணறல் மற்றும் நுரையீரல் பாதிப்பு ஏற்படுகிறது. மேலும் கடைகளில் உணவு பெருட்களிலும் புழுதிபடிந்து பொருட்கள் அனைத்தும் வீணாகிறது. இதனால் வியாபாரம் பாதிப்பதாக வியாபாரிகள் வேதனையோடு தெரிவிக்கின்றனர். இது குறித்து ஒப்பந்ததாரர்கள், அதிகாரிகளிடம் தெரிவித்தாலும் நடவடிக்கை இல்லை என்று குற்றம்சாட்டினர்.
மறியல்
இந்நிலையில் நேற்று மாலை அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் புழுதி பறக்காமல் இருக்க உடனடியாக குண்டும், குழியுமான சாலையை சீரமைத்து தார் சாலை அமைக்க வேண்டும் என கூறி வி.கைகாட்டி திருச்சி- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் பணியை தடுத்து நிறுத்தி மறியலில் ஈடுபட்டனர். இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கயர்லாபாத் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜவேல் மற்றும் போலீசார், மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தேசிய நெடுஞ்சாலைத்துறை உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து தார் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும், என்று உறுதியளித்தார். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். மறியலால் திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.