வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு

இளையான்குடி தாலுகா அலுவலகத்தில் வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

Update: 2021-03-11 19:29 GMT
இளையான்குடி,

தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 6-ந்தேதி நடக்கிறது. இன்று வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. இதையொட்டி தேர்தல் ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் முடுக்கி விட்டு உள்ளது. இளையான்குடி பகுதியில் வாக்காளர் விழிப்புணர்வு, உறுதிமொழி ஏற்றல், உறுதிமொழி கையொப்பம் இடல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன.
இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் கலெக்டர் மதுசூதன்ரெட்டி பேசும் போது, ஜனநாயக முறைப்படி வாக்களித்து தலைவரை தயக்கமின்றி தேர்வு செய்ய வேண்டும் என்றார். பின்னர் மாணவிகள் வரைந்த தேர்தல் விழிப்புணர்வு கோல போட்டியை பார்த்தார். வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கல்லூரி தலைவர் முகமது சுபைர், கல்லூரி செயலர் ஜபருல்லா கான், கல்லூரி முதல்வர் அப்பாஸ் மந்திரி மற்றும் ஆட்சிக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கிராம ஊராட்சிகளில் உலக மகளிர் தினத்தன்று வாக்காளர்களின் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக வண்ண கோல போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். மேலும் இளையான்குடி தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற தவறாமல் வாக்களிப்போம் என உறுதிமொழி ஏற்று விழிப்புணர்வு பதிவேட்டில் மாற்றுத்திறனாளிகள் உடன் இணைந்து கையொப்பமிட்டார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட தொழில் மேலாண்மை அலுவலர் கணேசன், தாசில்தார்கள் ஆனந்த், ராஜா, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணகுமார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்