வெயில் காலம் தொடங்கியதால் கோடைகால பழங்கள் வரத்து அதிகரிப்பு

வெயில் காலம் தொடங்கி உள்ளதால் கோடைகால பழங்கள் வரத்து அதிகரித்து உள்ளது.

Update: 2021-03-11 17:45 GMT
கோவை,

கோவையில் வெயில் காலம் தொடங்கி உள்ளதால் கோடை கால பழங்களான ஆரஞ்சு பழ வகைகள், தர்ப்பூசணி, எலுமிச்சை பழம், முலாம்பழம், சப்போட்டா உள்ளிட்ட பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது.

இதனால் இந்த பழங்களை பொதுமக்கள் பலர் வாங்கிச்செல்கிறார்கள். அதுபோன்று சாலையோரத்தில் பல இடங்களில் திடீர் கடைகள் முளைத்து உள்ளன. அங்கும் பழங்களின் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. 

இதுகுறித்து கோவை வைசியாள்வீதியில் உள்ள மொத்த பழவிற்பனை கடைக்காரர்கள் கூறியதாவது:-

கோவையில் குளிர்ச்சி தரக்கூடிய பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது. அதில் குறிப்பாக ஆரஞ்சு பழங்கள் அதிகளவு கொண்டு வரப்பட்டு உள்ளன. மராட்டிய மாநிலம் நாக்பூரில் இருந்து தினமும் 50 டன் கொண்டு வரப்பட்டு கோவையின் பல்வேறு கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

தற்போது ஒரு கிலோ ஆரஞ்சு ரூ.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதுபோன்று சாத்துக்குடி கிலோ ரூ.60-க்கும், தர்ப்பூசணி கிலோ ரூ.20-க்கும், சப்போட்டா ரூ.40 முதல் ரூ.50, முலாம்பழம் ரூ.20 முதல் ரூ.30, திராட்சை (பச்சை, விதை இல்லாதது) ரூ.80, கருப்பு ரூ.130-க்கும் விற்பனை செய்யப்பட்டன. 

மேலும் மாம்பழங்களின் வரத்தும் அதிகரித்து உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்