ராணிப்பேட்டை தொகுதி அ.தி.மு.க.வேட்பாளரை மாற்றக்கோரி நேற்று சாலைமறியல். 2 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

ராணிப்பேட்டை தொகுதி அ.தி.மு.க.வேட்பாளரை மாற்றக்கோரி நேற்று சாலைமறியலில் ஈடுபட்டனர். அப்போது 2 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-03-11 17:33 GMT
வாலாஜா

அ.தி.மு.க. வேட்பாளருக்கு எதிர்ப்பு

ராணிப்பேட்டை தொகுதிக்கு அ.தி.மு.க. வேட்பாளராக  எஸ்.எம்.சுகுமார் அறிவிக்கப்பட்டுள்ளார். இவருக்கு அ.தி.மு.க.வினர் சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவரை மாற்றக்கோரி நேற்று ராணிப்பேட்டை தொகுதியில் அடங்கி உள்ள வாலாஜாபேட்டை நகராட்சி அலுவலகம் முன்பு அக்கட்சி தொண்டர்கள் சிலர் சாலைமறியலில் ஈடுபட்டனர். 

எஸ்.எம்.சுகுமார் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்புதான் அ.தி.மு.க..வில் இணைந்ததாகவும், இவரும் ராணிப்பேட்டை தொகுதிக்கு அறிவிக்கப்படும் தி.மு.க. வேட்பாளரும் நெருங்கிய நண்பர்கள். இதனால் ராணிப்பேட்டை தொகுதியில் அ.தி.மு.க. தோல்வி அடையும். 

சாலை மறியல், தீக்குளிக்க முயற்சி

எனவே அறிவிக்கப்பட்டுள்ள எஸ்.எம்.சுகுமாரை உடனடியாக மாற்றி தி.மு.க. வேட்பாளருக்கு நெருக்கடி தரும் வகையில் வேறு வேட்பாளரை கட்சித் தலைமை அறிவிக்க வேண்டும் எனக்கூறி எம்.பி.டி. சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். 

அப்போது திடீரென கட்சித் தொண்டர்கள் 2 பேர் தங்கள் உடலில் மண்எண்ணெய் ஊற்றிக்கொண்டு வேட்பாளரை மாற்றக் கோரி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. 
இந்த சாலை மறியல் காரணமாக சுமார் அரைமணி நேரத்துக்கு மேல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவலறிந்து  வந்த வாலாஜாபேட்டை போலீசார் அவர்களை அப்புறப்படுத்தினர்.
இந்த சம்பவத்தால் அந்தப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்