தேர்தலை அமைதியான முறையில் நடத்தி முடிக்க ஒத்துழைப்பு தாருங்கள் என திருக்கோவிலூரில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜி வேண்டுகோள் விடுத்தார்.
அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றி தேர்தலை அமைதியான முறையில் நடத்தி முடிக்க ஒத்துழைப்பு தாருங்கள் என திருக்கோவிலூரில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜி வேண்டுகோள் விடுத்தார்.
திருக்கோவிலூர்
அனைத்து கட்சி கூட்டம்
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சி கூட்டம் திருக்கோவிலூர் சந்தைப்பேட்டையில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதற்கு தாசில்தார் சிவசங்கரன் தலைமை தாங்கினார். தேர்தல் துணை தாசில்தார்கள் பாஸ்கரன், கற்பகம், திருக்கோவிலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். சப்-இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் வரவேற்று பேசினார்.
கூட்டத்தில் திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜி பேசியதாவது:-
நடத்தை விதிமுறைகள்
சட்டமன்ற தேர்தலை அமைதியாக நடத்தி முடிக்க அனைத்து கட்சியினரும் ஒத்துழைக்க வேண்டும். மேலும் தேர்தல் கமிஷன் அறிவித்துள்ள நடத்தை விதிமுறைகளை அனைவரும் பின்பற்றி போலீசாருக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
மேலும் வேட்புமனு தாக்கல் செய்யும் போது பின்பற்றவேண்டியவை, பொதுக்கூட்டம், தேர்தல் பிரசாரம் ஆகியவற்றுக்கு அனுமதி எவ்வாறு வாங்குவது என்பது குறித்தான குறிப்புகளையும் தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. அதன்படி உரிய அனுமதி பெற்று ஒவ்வொரு கட்சியினரும் மற்ற கட்சியினருக்கு இடையூறு இல்லாத வகையிலும் குறிப்பாக பொதுமக்கள் பாதிக்காத வகையில் தங்களின் தேர்தல் பணியை செய்து திருக்கோவிலூர் பகுதியில் சட்டமன்ற தேர்தல் எவ்வித சட்டம்-ஒழுங்கு பிரச்சினையும் இன்றி அமைதியாக நடந்தது என்று சொல்லும் வகையில் அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
கடும் நடவடிக்கை
சாதி, மதம் போன்ற பிரச்சினைகளை கையில் எடுத்துக்கொண்டு யாரேனும் சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் செயல்பட்டால் எந்தவித பாகுபாடும் இன்றி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதைத் தொடர்ந்து திருக்கோவிலூர் தாசில்தாரும், உதவி தேர்தல் நடத்தும் அலுவலருமான சிவசங்கரன் தேர்தல் கமிஷன் அறிவித்துள்ள நடைமுறைகள் குறித்து விளக்கமாக எடுத்துரைத்தார்.
கூட்டத்தில் தாசில்தார்கள் கார்த்திகேயன், ஆனந்தன், விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் முருகன், திருக்கோவிலூர் நகர அ.தி.மு.க. செயலாளர் சுப்பு, ஒன்றிய தி.மு.க. செயலாளர் வக்கீல் தங்கம், பா.ம.க. மாவட்ட முன்னாள் செயலாளர் செழியன், த.மா.கா. வட்டார தலைவர் வெற்றிவேல், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொகுதி செயலாளர் வீர விடுதலை செல்வன், நகர செயலாளர் தயா என்கிற செந்தில், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட துணை செயலாளர் ராமசாமி, நகர செயலாளர் பசீர் உள்ளிட்ட அனைத்து கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.