திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி விழா திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
உடுமலையை அடுத்த திருமூர்த்தி மலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தளி
உடுமலையை அடுத்த திருமூர்த்தி மலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
அமணலிங்கேஸ்வரர் கோவில்
உடுமலை அருகே இயற்கை எழில் சூழ்ந்த திருமூர்த்திமலை அடிவாரத்தில் அமணலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பிரம்மா, சிவன், விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகள் சுயம்புவாக ஒரே கல்லில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள். கோவில் வளாகத்தில் விநாயகர், சுப்பிரமணியர், சப்தகன்னிகள், நவகிரக சன்னதிகளும் உள்ளன. இந்த கோவிலில் மகா சிவராத்திரி, அமாவாசை, பிரதோஷம் உள்ளிட்ட விசேஷ நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். மகாசிவராத்திரி, தை அமாவாசை ஆகிய நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.
இந்த கோவிலில் கோபுரம் அமைக்கப்படவில்லை. அதற்கு பதிலாக மூங்கில் குச்சிகளைக்கொண்டு கோபுர வடிவில் செய்யப்பட்ட சப்பரத்தை குன்றின்மேல் வைத்து வழிபாடு நடத்தப்படுகிறது. இந்த சப்பரம் கட்டளைதாரர்கள் மூலமாக ஆண்டுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்பட்டு உடுமலை அருகே உள்ள பூலாங்கிணர் கிராமத்தில் இருந்து மகாசிவராத்திரியன்று திருமூர்த்திமலைக்கு ஊர்வலமாக கொண்டு வரப்படும். இந்த நிகழ்ச்சி பாரம்பரியமாக நடந்து வருகிறது.
சப்பரம்
அதன்படி மகாசிவராத்திரியையொட்டி உடுமலை அருகே உள்ள பூலாங்கிணர் கிராமத்தில் நேற்றுமுன்தினம் மாலை சப்பரம் அலங்கரிக்கப்பட்டது. பின்னர் அன்று இரவு 8 மணிக்கு சப்பரபூஜை நடந்தது. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து நேற்று காலை பூலாங்கிணர் கிராமத்தில் இருந்து சப்பரம் சிறப்பு பூஜை செய்யப்பட்டு ஊர்வலமாக புறப்பட்டது. ஊர்வலம் ஆர்.கிருஷ்ணாபுரம், ஆர்.வேலூர், வாளவாடி, தளி வழியாக திருமூர்த்திமலைக்கு சென்றது. இந்த சப்பரம் டிராக்டரில் வைத்து எடுத்து செல்லப்பட்டு வழித்தடத்தில் உள்ள கிராமங்களின் எல்லைகளில் கீழே இறக்கப்பட்டு பக்தர்களால் தூக்கி செல்லப்பட்டது. வழித்தட கிராமங்களுக்கு வந்ததும் அங்கு பக்தர்களால் வைக்கப்பட்ட உப்பு மிளகு குவியல் மீது சப்பரம் வைக்கப்பட்டது. அங்கு பக்தர்கள் கொண்டு வந்த தேங்காய்கள் உடைக்கப்பட்டு பூஜை செய்யப்பட்டது. பக்தர்கள் நேர்த்திக்கடனாக வாழைப்பழம், சுண்டல் ஆகியவற்றை சப்பரம் மீது வீசி வழிபட்டனர்.
கிராமத்தில் பூஜைகள் முடிந்ததும் சப்பரம் டிராக்டரில் ஏற்றப்பட்டு அடுத்த கிராமத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டது. அந்த கிராமத்திலும் சப்பரம் டிராக்டரில் இருந்து பக்தர்களால் இறக்கி எடுத்துச்செல்லப்பட்டு பூஜைகள் நடந்த பிறகு மீண்டும் டிராக்டரில் ஏற்றப்பட்டு கொண்டு செல்லப்பட்டது. அவ்வாறு ஊர்வலம் கிராமங்கள் வழியாக திருமூர்த்தி மலைக்கு சென்றது. அங்கு சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் பயபக்தியுடன் மும்மூர்த்திகள் எழுந்தருளியுள்ள சப்பரத்தை வரவேற்றனர். அப்போது அதன் மீது பக்தர்கள் நேர்த்திக்கடனாக வாழைப்பழம், கல்உப்பு மற்றும் மிளகு வீசி வழிபட்டனர். அவர்களுடன் விவசாயிகளும் தங்கள் நிலங்களில் விளைந்த நெல், கொண்டைக்கடலை, மக்காச்சோளம் மற்றும் சிறு தானியங்களை சப்பரத்துக்கு படைத்து வழிபட்டனர்.
சிறப்பு பூஜை
பின்னர் மலைவாழ் மக்கள் தங்கள் குல வழக்கப்படி மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்து சப்பரத்தை குன்றின் மீது வைத்து வழிபட்டனர். அதைத்தொடர்ந்து கோவிலில் நான்கு ஜாமகால பூஜைகள் தொடங்கி நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக பக்தர்கள் மோட்டார் சைக்கிள், கார், வேன், பஸ் உள்ளிட்ட வாகனங்களிலும், பாதயாத்திரையாகவும் திருமூர்த்திமலைக்கு வருகை தந்தனர். பின்னர் இரவு முழுவதும் கண்விழித்து மூர்த்திகளுக்கு நடைபெற்ற பூஜைக்கு தம்மால் இயன்ற அபிஷேக பொருட்களை கொடுத்து சாமி தரிசனம் செய்தனர்.
ஆண்டுதோறும் இரவு முழுவதும் நடைபெறுகின்ற தேவராட்டம், பரதநாட்டியம், ஆடல்பாடல் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் கொரோனா காரணமாக இந்தாண்டு ரத்து செய்யப்பட்டது. இதனால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர். மேலும் கோவிலுக்கு வருகை தந்திருந்த பக்தர்கள் பஞ்சலிங்க அருவியில் குளித்து மகிழ்ந்தனர். இதனால் கோவில் மற்றும் அருவி பகுதியில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளையும் பொதுமக்களுக்கான அடிப்படை வசதிகளையும் கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். மேலும் விழாவையொட்டி தளி போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.