ராமேசுவரம் கோவிலில் இரவு முழுவதும் சாமிக்கு சிறப்பு அபிஷேகம்
மாசி மகா சிவராத்திரியையொட்டி ராமேசுவரம் கோவிலில் இரவு முழுவதும் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ராமேசுவரம்,
மாசி மகா சிவராத்திரியையொட்டி ராமேசுவரம் கோவிலில் இரவு முழுவதும் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ராமநாதசாமி கோவில்
ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் மாசி மகா சிவராத்திரி திருவிழா கடந்த 4-ந் தேதி அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா தொடங்கியதில் இருந்து கடந்த ஒரு வாரமாக சாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகின்றனர்.
வெள்ளித்தேரோட்டம்
இந்த நிலையில் மாசி மகா சிவராத்திரி திருவிழாவின் 8-வது நாளான நேற்று காலை நடராஜர் சிவகாமி அம்பாள் மரக்கேடயத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தனர். தொடர்ந்து இரவு 9 மணிஅளவில் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி ரதத்தில் சாமி அம்பாள் வைக்கப்பட்டது.
தொடர்ந்து சாமி-அம்பாள் வைக்கப்பட்ட வெள்ளித்தேரை ஏராளமான பக்தர்கள் கிழக்கு வாசல் பகுதியில் இருந்து இழுத்து வந்தனர். கோவிலின் நான்கு ரத வீதிகளை சுற்றி மீண்டும் வெள்ளித்தேர் ஆனது கோவில் வாசலுக்கு வந்தடைந்தது. வெள்ளி தேரோட்ட நிகழ்ச்சியில் கோவில் இணை ஆணையர் பொறுப்பு தனபால் மற்றும் சூப்பிரண்டுகள் ககாரின்ராஜ், பாலசுப்பிரமணியன், பேஷ்கார்கள் அண்ணாதுரை, கலைச்செல்வன், கமலநாதன், கண்ணன், உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இரவு முழுவதும் திறப்பு
மாசி மகா சிவராத்திரியான நேற்று ராமேசுவரம் கோவில் நடையானது 4.30 மணி அளவில் திறக்கப்பட்டது. தொடர்ந்து வழக்கமாக ஒரு மணி மற்றும் இரவு 8 மணிக்கும் அடைக்கப்படும் கோவில் நடையானது நேற்று பகல் மற்றும் இரவு முழுவதும் திறக்கப்பட்டு இருந்தது. மகா சிவராத்திரியையொட்டி அக்னி தீர்த்த கடற்கரை அருகே உள்ள பாபா அன்ன சத்திரத்தில் இருந்து சீதாராம்தாஸ் பாபா தலைமையில் ஏராளமான வட மாநில பக்தர்கள் கங்கை தீர்த்தத்துடன் ஊர்வலமாக கோவிலுக்கு வருகை தந்து மூன்றாம் பிரகாரத்தை சுற்றி கங்கை தீர்த்தத்தால் சாமிக்கு அபிஷேகம் செய்து வழிபாடு நடத்தினர்.
அதுபோல் மாசி மகா சிவராத்திரி ஆன நேற்று ராமேசுவரம் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. ஆனால் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு பக்தர்களின் கூட்டம் குறைவாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
சிறப்பு அபிஷேகம்
நேற்று மாலை 6 மணியில் இருந்து அதிகாலை வரையிலும் மகா சிவராத்திரி ஆறு கால சிறப்பு அபிஷேகம் சாமிக்கு நடைபெற்றது. திருவிழாவின் 9-வது நாளான இன்று காலை 10 மணி அளவில் சாமி- அம்பாள் தேரோட்டம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.