ஊட்டியில், தனியார் வங்கி மூடல்
ஊட்டியில் ஊழியர்கள் 3 பேருக்கு கொரோனா ஏற்பட்டதால், தனியார் வங்கி மூடப்பட்டது.
ஊட்டி,
ஊட்டி சேரிங்கிராஸ் பகுதியில் இருந்து கலெக்டர் அலுவலகம் செல்லும் சாலையோரத்தில் தனியார் வங்கி ஒன்று உள்ளது. அந்த வங்கியில் பணிபுரிந்து வரும் ஊழியர்கள் 3 பேருக்கு சளி, காய்ச்சல், இருமல் இருந்தது.
தொடர்ந்து அவர்கள் ஊட்டி அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். அவர்கள் 3 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக ஊட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து தடுப்பு நடவடிக்கையாக தனியார் வங்கி மூடப்பட்டது. மேலும் அங்கு பணிபுரிந்து வந்த சக ஊழியர்களிடம் இருந்து சளி மாதிரி சேகரித்து கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வங்கிக்கு சென்று வந்த வாடிக்கையாளர்கள் தங்களுக்கும் தொற்று ஏற்படுமோ என்ற அச்சத்தில் உள்ளனர். நேற்று நகராட்சி ஊழியர்கள் தனியார் வங்கி, ஏ.டி.எம். மையம் மற்றும் முன்பகுதியில் கிருமிநாசினி தெளித்து, பிளீச்சிங் பவுடர் போட்டு சுகாதார பணியில் ஈடுபட்டனர்.