இந்து திருக்கோவில் கூட்டமைப்பு நிர்வாகிக்கு சரமாரி அரிவாள் வெட்டு
இந்து திருக்கோவில் கூட்டமைப்பு நிர்வாகியை சரமாரி அரிவாள் வெட்டிய அடையாளம் தெரியாத 4 நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
பூந்தமல்லி,
சென்னை அமைந்தகரை, செனாய் நகர் பாரதிபுரம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 34). இவர், இந்து திருக்கோவில் கூட்டமைப்பின் மாநில பொதுச் செயலாளராக உள்ளார். நேற்று இரவு வீட்டின் தரைத்தளத்தில் உள்ள அலுவலகத்தில் அமர்ந்து கொண்டிருந்தார்.
அப்போது அடையாளம் தெரியாத 4 நபர்கள், அவரது அலுவலகத்துக்குள் புகுந்து சதீஷ்குமாரை அரிவாளால் சரமாரியாக வெட்டினார்கள். இதில் பலத்த காயம் அடைந்த சதீஷ்குமார், ரத்த வெள்ளத்தில் சரிந்தார். உடனே அந்த கும்பல் தப்பி ஓடிவிட்டது. படுகாயமடைந்த சதீஷ்குமாரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இதுபற்றி அமைந்தகரை போலீசார் வழக்குப்பதிவு செய்து சதீஷ்குமாரை வெட்டிய மர்ம நபர்கள் யார்? எதற்காக அவரை வெட்டினார்கள்? என விசாரித்து வருகின்றனர்.