ஓசூர் அருகே யானை மிதித்து விவசாயி பலி
ஓசூர் அருகே யானை மிதித்து விவசாயி பலியானார்.
ஓசூர்:
ஓசூர் அருகே யானை மிதித்து விவசாயி பலியானார்.
விவசாயி
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சானமாவு மற்றும் போடூர்பள்ளம் ஆகிய வனப்பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகளவில் உள்ளது. இந்த யானைகள், தனித்தனியாகவும், கூட்டமாகவும் இரவு நேரங்களில் அருகில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்து விவசாய பயிர்களை தொடர்ந்து சேதப்படுத்தி வருகின்றன. இதனால், விவசாயிகளும், பொதுமக்களும் மிகவும் அச்சம் அடைந்துள்ளனர்.
இந்த நிலையில், ஓசூர் அருகே தொரப்பள்ளி பகுதியில் உள்ள திருச்சிப்பள்ளி கிராமத்தை சேர்ந்த ராஜப்பா என்ற பாப்பைய்யா (வயது 60) என்ற விவசாயி நேற்று காலை, தனது தோட்டத்திற்கு செல்வதற்காக வீட்டைவிட்டு வெளியே வந்தார். அப்போது புதர் மறைவில் பதுங்கியிருந்த ஒற்றை யானை, திடீரென அவரை துரத்திச் சென்று கால்களால் மிதித்தது.
பரிதாப சாவு
யானை மிதித்ததில் ராஜப்பா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். பின்னர், அந்த யானை மீண்டும் காட்டுக்குள் சென்று விட்டது. தகவல் அறிந்து ஓசூர் அட்கோ போலீசார் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
பின்னர் ராஜப்பாவின் உடல் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இறந்துபோன ராஜப்பாவிற்கு, பாப்பம்மா என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். யானை மிதித்து விவசாயி பலியான சம்பவம், கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதனிடையே, ஒற்றை யானை அந்த பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து சுற்றித்திரிந்த நிலையில், அதனை காட்டுக்குள் விரட்டவும், யானையின் நடமாட்டம் குறித்து கிராம மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கவும், வனத்துறையினர் தவறிவிட்டனர் என்று பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதனால் ஒரு உயிரிழப்பு நேர்ந்துள்ளது என்று கிராம மக்கள் வருத்தத்துடன் தெரிவித்தனர்.