கோவை பழக்கடையில் 500 ரூபாய் கள்ள நோட்டுகளை மாற்ற முயன்ற கேரள வாலிபரை போலீசார் கைது
கோவை பழக்கடையில் 500 ரூபாய் கள்ள நோட்டுகளை மாற்ற முயன்ற கேரள வாலிபரை போலீசார் கைது செய்தனர். தப்பியோடிய மற்றொருவரை தேடி வருகின்றனர்.
கோவை,
கோவை காந்திபுரம் மத்திய பஸ் நிலையத்தில் உள்ள பழக்கடைக்கு 2 பேர் வந்தனர். அவர்கள் பழங்களை வாங்கி விட்டு இரண்டு 500 ரூபாய் நோட்டுகளை பழக்கடை உரிமையாளரிடம் கொடுத்தனர்.
அதனை வாங்கிப் பார்த்த கடைக்காரருக்கு அது கள்ள ரூபாய் நோட்டு என்று சந்தேகம் ஏற்பட்டது. உடனே அவர்களை பிடித்து போலீசில் ஒப்படைக்க முயன்றார். அதற்குள் அவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.
இதனை தொடர்ந்து பழக்கடை உரிமையாளர், காட்டூர் போலீஸ் நிலையத்தை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார். கள்ள நோட்டுகளை மாற்ற முயன்றவர்களின் அங்க, அடையாளங்கள், மற்றும் அவர்கள் பஸ் நிலையத்தில் பதுங்கி இருக்கலாம் என்றும் கூறினார்.
இதனை தொடர்ந்து அங்கு விரைந்து வந்த போலீசார் காந்திபுரம் பஸ் நிலையத்தில் தேடுதல் வேட்டை நடத்தினர். இந்த நிலையில் கள்ள நோட்டுகளை மாற்ற முயன்ற அந்த 2 வாலிபர்களும் பஸ் நிலையத்தில் நின்றிருந்ததை போலீசார் பார்த்து விட்டனர்.
போலீசாரை கண்டதும் 2பேரும் அங்கிருந்து தப்ப முயன்றனர். இதில் ஒரு வாலிபர் போலீசாரிடம் சிக்கிக்கொண்டார். மற்றொருவர் அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.
போலீசில் பிடிபட்டவர் கள்ள ரூபாய் நோட்டுகளை வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில், அவர், கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே உள்ள வழியூரை சேர்ந்த ஜூனைத்கான் (24), என்பது தெரியவந்தது. பின்னர் அவரை போலீசார் கைது செய்தனர். இதற்கிடையில் தப்பி ஓடியது அவரது நண்பர் பாசில் (26) என்பதும் தெரிந்தது.
இதனைத்தொடர்ந்து ஜூனைத்கானிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். அவரிடம் 101 எண்ணிக்கையில் 500 ரூபாய் கள்ள நோட்டுகள் ரூ.50 ஆயிரத்து 500 இருந்ததை பறிமுதல் செய்தனர்.
மேலும் அவர் கள்ள நோட்டுகளை பதுக்கி வைத்துள்ளாரா? இவருக்கும் கள்ளநோட்டு கும்பலுக்கும் உள்ள பின்னணி என்ன? என்பது குறித்தும், தப்பி ஓடிய நபர் குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சட்டசபை தேர்தல் நடக்க உள்ளதால், தேர்தல் நேரத்தில் புழக்கத்தில் விட்டால் தெரியாது என்பதற்காக கோவை வந்தனரா? என்றும் விசாரணை நடைபெறுகிறது.