செய்யூர்(தனி) தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளரை மாற்றக்கோரி சாலைமறியல் லாரி கண்ணாடி உடைப்பு
செய்யூர்(தனி) தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளரை மாற்றக்கோரி சாலைமறியல் போராட்டம் நடந்தது. இதில் லாரி கண்ணாடி உடைக்கப்பட்டது.
மதுராந்தகம்,
அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியலை நேற்று மாலை அ.தி.மு.க. தலைமை கழகம் அறிவித்தது. செய்யூர் (தனி்) தொகுதி வேட்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ. கணிதா சம்பத் நிறுத்தப்பட்டார்.
சித்தாமூர் கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் டாக்டர் பிரவீன்குமாரின் ஆதரவாளர்கள் கணிதா சம்பத்தை மாற்ற வேண்டும். டாக்டர் பிரவீன் குமாரை வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று கூறி சித்தாமூர் கூட்டு சாலையில் நேற்று மாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் அவர்கள் அந்த வழியாக வந்த லாரியின் கண்ணாடியை உடைத்து எதிர்ப்பை தெரிவித்தனர். தகவலறிந்த மதுராந்தகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன், சப்-இன்ஸ்பெக்டர் மணி ஆகியோர் அ.தி.மு.க. நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். போராட்டம் காரணமாக அந்த வழித்தடத்தில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பின்னர் அவர்கள் வேட்பாளரை மாற்றும் வரை போராட்டம் தொடரும் என்று கோஷங்களை எழுப்பி விட்டு கலைந்து சென்றனர்.