கோவை மாவட்டத்தில் தபால் ஓட்டுக்கு விண்ணப்பம் வழங்கும் பணி 60 சதவீதம் நிறைவு
கோவை மாவட்டத்தில் 80 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் ஓட்டுக்கு விண்ணப்பம் வழங்கும் பணி 60 சதவீதம் நிறைவடைந்து உள்ளதாக அதிகாரி தெரிவித்து உள்ளார்.
கோவை
தமிழகத்தில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந் தேதி சட்டமன்றத்திற்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. கொரோனா அச்சம் காரணமாக இந்த தேர்தலில் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் தபால் மூலம் வாக்களிக்க தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்து உள்ளது.
இதன்படி கோவை மாவட்டத்தில் 80 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள் 64 ஆயிரத்து 500 பேர் உள்ளனர். இதுதவிர மாற்றுத்திறனாளிகள் 15 ஆயிரம் பேர் உள்ளனர்.
இவர்கள் அனைவருக்கும் வீடு, வீடாக சென்று தபால் ஓட்டு விண்ணப்பம் வழங்கும் பணியில் அரசு ஊழியர்கள் 2 ஆயிரம் பேர் ஈடுபட்டு உள்ளனர். இந்த பணி தற்போது வரை 60 சதவீதம் நிறைவடைந்து உள்ளது. இதுகுறித்து தேர்தல் பிரிவு அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
கோவை மாவட்டத்தில் உள்ள 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு, வீடாக சென்று தபால் ஓட்டு விண்ணப்பம் வழங்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
இந்த பணியை வருகிற 12-ந் தேதிக்குள் முடிக்க அறிவுறுத்தி உள்ளோம். வேட்பு மனு தாக்கல் வருகிற 12-ந் தேதி தொடங்கி 19-ந் தேதி வரை நடக்கிறது.
வேட்பு மனு பரிசீலனை முடிந்து இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்ட பின்னர் வேட்பாளர்கள் பெயர் மற்றும் அவர்களது சின்னம் அடங்கிய ஓட்டு சீட்டு அச்சடிக்கப்படும்.
இந்த அச்சடிக்கப்பட்ட ஓட்டு சீட்டுடன், தேர்தல் அதிகாரிகள், போலீசார், அரசியல் கட்சியினர் மற்றும் வீடியோ கேமராமேன் அடங்கிய தேர்தல் குழு முதியோர்கள், மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு சென்று அவர்களது தபால் ஓட்டினை பெறுவார்கள்.
இந்த நடைமுறைகள் அனைத்தும் வீடியோவாக பதிவு செய்யப்படும். எனவே இதில் முறைகேடு எதுவும் நடைபெற வாய்ப்பு இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.