ஏழை மாணவனின் ஆசையை நிறைவேற்றிய ராகுல்காந்தி

ஏழை மாணவனின் ஆசையை ராகுல்காந்தி நிறைவேற்றினார்.

Update: 2021-03-10 22:27 GMT
அழகியமண்டபம்:
குமரி மாவட்டத்தில் கடந்த 1-ந் தேதி ராகுல்காந்தி தேர்தல் பிரசாரம் செய்தார். இந்த பிரசாரத்தின் போது அவர் மாணவ, மாணவிகளை உற்சாகப்படுத்தும் படி நடனமாடியும், தண்டால் எடுத்தும் ஆச்சர்யப்படுத்தினார்.
மேலும் அழகியமண்டபம் அருகே பரைக்கோடு பகுதியில் சாலையோரம் உள்ள டீக்கடைக்கு சென்றார். அப்போது அதே பகுதியை சேர்ந்த ஆன்றனி சேவியர் மகன் ஆன்றனி பெலிக்ஸ் என்ற 5-ம் வகுப்பு மாணவன் அவரிடம் உற்சாகமாக உரையாடினான்.
அந்த சமயத்தில் ராகுல்காந்தியிடம்  ஓட்டப்பந்தய வீரனாக வேண்டும் என்று தனது ஆசையை வெளிப்படுத்தினான். அதற்கு, உனக்கு என்ன தேவை என அவர் பரிவுடன்கேட்ட போது, காலில் அணிந்து விளையாட ‘ஷூ' வேண்டும் என கேட்டான். உடனே வாங்கி அனுப்புகிறேன் என கூறி விட்டு பிரசாரத்தை தொடங்கி விட்டார்.
இந்த சம்பவம் நடந்த 9-வது நாளான நேற்று ராகுல்காந்தி, ஏழை மாணவனுக்கு அளித்த வாக்குறுதிபடி டெல்லியில் இருந்து கூரியர் மூலம் ‘ஷூ'வை வாங்கி அனுப்பி வைத்தார். இதனை பார்த்த ஏழை மாணவனின் குடும்பத்தினர் இன்ப அதிர்ச்சி அடைந்தனர். மாணவனும் அந்த பகுதியை சேர்ந்தவர்களிடம் சென்று, ராகுல்காந்தி எனக்கு ஷூவை அனுப்பியுள்ளதாக பெருமைப்பட கூறி வருகிறான்.

மேலும் செய்திகள்