பல்வேறு இடங்களில் நடந்த வாகன சோதனையில் வியாபாரி உள்பட 3 பேரிடம் ரூ.3½ லட்சம் பறிமுதல்

பல்வேறு இடங்களில் நடந்த வாகன சோதனையில் வியாபாரி உள்பட 3 பேரிடம் ரூ.3½ லட்சத்தை தோ்தல் பறக்கும் படை அதிகாாிகள் பறிமுதல் செய்தனா்.

Update: 2021-03-10 21:49 GMT
ஈரோடு
பல்வேறு இடங்களில் நடந்த வாகன சோதனையில் வியாபாரி உள்பட 3 போிடம் ரூ.3½ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. 
வாகன சோதனை
தமிழகத்தில் அடுத்த மாதம் 6-ந் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.50 ஆயிரத்துக்கு மேல் கொண்டு செல்லும் பணம் பறிமுதல் செய்யப்படுகிறது.
இதற்காக அமைக்கப்பட்ட தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் ஆங்காங்கே தீடீர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். 
ரூ.69 ஆயிரம்
இந்தநிலையில் நேற்று காலை அந்தியூர் அருகே உள்ள வெள்ளித்திருப்பூர் பகுதியில் தொட்டி கிணறு என்ற இடத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி ஸ்ரீராம் தலைமையில் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தார்கள். 
அப்போது சேலம் மாவட்டம் கொளத்தூரில் இருந்து அந்தியூர் பள்ளிபாளையம் நோக்கி ஒரு லாரி வந்துகொண்டு இருந்தது. 
பறக்கும் படை அதிகாரிகள் அந்த லாரியை நிறுத்தி, அதை ஓட்டிவந்த டிரைவர் சுப்பிரமணியம் என்பவரிடம் சோதனை நடத்தினார்கள். அப்போது அவரிடம் ரூ.69 ஆயிரம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
ஒப்படைப்பு
இதுபற்றி பறக்கும் படை அதிகாரிகள் சுப்பிரமணியத்திடம் கேட்டபோது, பணத்துக்கான எந்த ஆவணங்களும் அவரிடம் இல்லை. இதைத்தொடர்ந்து உரிய ஆவணங்களை காட்டி பணத்தை பெற்றுக்கொள்ளுமாறு சுப்பிரமணியத்திடம் அதிகாரிகள் கூறினார்கள். பின்னர் பறிமுதல் செய்த பணத்தை அந்தியூர் தாசில்தார் அலுவலகத்துக்கு சென்று, தேர்தல் நடத்தும் அதிகாரி இளங்கோவிடம் ஒப்படைத்தார்கள். 
அப்போது அந்தியூர் தாசில்தார் வீரலட்சுமி, கிராம நிர்வாக அலுவலர் முருகானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர். 
ரூ.85 ஆயிரம்
இதேபோல் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள பவானிசாகர் அருகே நால் ரோட்டில் பறக்கும் படை அதிகாரிகள் நேற்று அதிகாலை வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தார்கள். அப்போது அந்த வழியாக ஒரு வேன் வந்தது. அந்த வேனை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினார்கள். பின்னர் வேனுக்குள் சோதனை நடத்தியபோது அதில் ரூ.85 ஆயிரம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பணத்துக்கான ஆவணங்களும் அவரிடம் இல்லை. 
கோழி வியாபாரி
இதைத்தொடர்ந்து அதிகாரிகள் நடத்திய விசாரணையில் வேனை ஓட்டி வந்தவர் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த சிவசங்கர் (வயது 28) என்பதும், கோழி வியாபாரி என்பதும் தெரியவந்தது. மேலும் கோழி விற்ற பணத்தை ஊருக்கு கொண்டு செல்வதாக அவர் கூறினார். அதைக்கேட்ட அதிகாரிகள் உரிய ஆவணங்களை காட்டி பணத்தை பெற்றுக்கொள்ளுமாறு அவரிடம் கூறினார்கள். அதன்பிறகு பறிமுதல் செய்யப்பட்ட பணம் பவானிசாகர் தொகுதி தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் ரவிசங்கரிடம் ஒப்படைக்கப்பட்டது.
பவானி
பவானியில் உள்ள குருப்பநாயக்கன் பாளையம் மேட்டூர் பவானி சாலை அருகே காலிங்கராயன்பாளையம் மூவேந்தர் நகர் பகுதியைச் சார்ந்த தன்ராஜ் என்பவர் வந்த காரில் ரூ.1 லட்சத்து 90 ஆயிரம் உரிய ஆவணங்கள் இல்லாததால் பறிமுதல் செய்யப்பட்டு தேர்தல் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடந்த வாகன சோதனையில் ரூ.3 லட்சத்து 54 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்