சூலூர் தொகுதியில் கார்களில் கொண்டு சென்ற ரூ.1¾ லட்சம் பறிமுதல்
சூலூர் தொகுதியில் கார்களில் கொண்டு சென்ற ரூ.1¾ லட்சத்தை பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்
கருமத்தம்பட்டி
சூலூர் தொகுதியில் கார்களில் கொண்டு சென்ற ரூ.1¾ லட்சத்தை பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தேர்தல் பறக்கும் படை சோதனை
கோவை மாவட்டம் சூலூரில் சட்டமன்ற தேர்தலை ஒட்டி இரவு முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கருமத்தம்பட்டி சூலூர் எல்.அன்.டி. பைபாஸ் அருகில் தேர்தல் பறக்கும் படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு மேல் அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அந்த காரில் உரிய ஆவணங்கள் இல்லாமல், ரூ.53 ஆயிரம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
காரை சூலூர் கலங்கல் பகுதியை சேர்ந்த நெடுஞ்செழியன் என்பவர் ஓட்டி வந்தார். பணத்தை பறிமுதல் செய்து அவரிடம் விசாரணை நடத்தினர். வருமான வரித்துறை ஆய்வாளர் ஞானப்பிரகாசம், சிறப்பு உதவி ஆய்வாளர் ஈஸ்வரன் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்த ரூ. 53 ஆயிரத்தை தாசில்தாரிடம் ஒப்படைத்தனர்.
பறிமுதல்
இதே போல் நேற்று மதியம் கள்ளப்பாளையம் அருகே தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.அப்போது சிந்தாமணிப்புதூர் பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவர் உரிய ஆவணங்களின்றி காரில் ரூ.1 லட்சத்து 28 ஆயிரத்தை கொண்டு வந்தார்.
அப்போது அங்கு சோதனையில் ஈடுபட்டிருந்த மாவட்ட வரி ஆணையர் சக்திவேல் மற்றும் காவல் துணை ஆய்வாளர் ரத்தினசாமி ஆகியோர் அதனை கைப்பற்றினர். பின்னர் அந்த பணத்தை பறிமுதல் செய்து சூலூர் தாசில்தாரிடம் ஒப்படைத்தனர்.
கார்த்திக் தனது நகையை மீட்பதற்காக தனது அத்தையிடம் பணத்தை பெற்று வந்ததாக தாசில்தாரிடம் கூறினார். இது குறித்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.