ஜி.பி.எஸ். கருவி பொருத்திய வாகனங்களை கண்காணிக்க ஏற்பாடு
ஜி.பி.எஸ். கருவி பொருத்திய வாகனங்களை கண்காணிக்க ஏற்பாடு
திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், 8 சட்டமன்ற தொகுதிகளிலும் பறக்கும் படை அதிகாரிகள், தேர்தல் நிலை கண்காணிப்பாளர்கள், வீடியோ கிராபர்கள் அமைக்கப்பட்டு அவர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த சோதனையில் ஈடுபடுகிற 64 வாகனங்களிலும் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டுள்ளது. இந்த கருவி மூலம் இந்த வாகனங்கள் எந்த பகுதியில் சென்று கொண்டிருக்கிறது என்பதை கண்காணிக்கும் வகையில் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனை கட்டுப்பாட்டு அறையில் இருக்கும் அதிகாரிகள் கண்காணித்து வருவார்கள். தேர்தல் தொடர்பான புகார்கள் பொதுமக்கள் அல்லது அரசியல் கட்சியினர் தெரிவிக்கும் போது, அந்த பகுதியின் அருகில் இருக்கிற வாகனத்தின் பறக்கும் படை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்படும். அதன் மூலம் அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைவாக சென்று நடவடிக்கை மேற்கொள்ள முடியும் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.