வீடு வீடாக தபால் வாக்கு விண்ணப்பம் வினியோகம் தேர்தல் நடத்தும் அதிகாரி ஆய்வு
வால்பாறை தொகுதியில் வீடு, வீடாக தபால் வாக்குக்கான விண்ணப்பங்கள் வினியோகம் 70 சதவீதம் நிறைவடைந்து உள்ளது. இந்த பணியை தேர்தல் நடத்தும் அதிகாரி துரைசாமி ஆய்வு செய்தார்.
பொள்ளாச்சி,
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 6-ந் தேதி நடைபெறுகிறது. இதற்கிடையில் 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கொரோனா நோயாளிகள் தபால் மூலம் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
அதன்படி 12 பி படிவம் தபால் வாக்கு அளிப்பதற்கு வழங்கப்பட்டு வருகிறது. விருப்பமுள்ள வாக்காளர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
வால்பாறை தொகுதிக்கு உட்பட்ட ஆனைமலை, கோட்டூர், ஆழியாறு, வால்பாறை பகுதிகளில் வீடு, வீடாக விண்ணப்பம் கொடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணி 70 சதவீதம் நிறைவடைந்து உள்ளது.
இந்த நிலையில் ஆனைமலையில் தேர்தல் நடத்தும் அதிகாரி துரைசாமி விண்ணப்பம் கொடுக்கும் பணியை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அவர் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு சரியான விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறதா? என்று வீடு, வீடாக சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது தனி தாசில்தார்கள் வைரமுத்து, சசிரேகா மற்றும் பலர் உடன் இருந்தனர்.
இதுகுறித்து தேர்தல் நடத்தும் அதிகாரி துரைசாமி கூறியதாவது:-
வால்பாறை தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் 80 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் 3,185 பேரும், மாற்றுத்திறனாளிகள் 1,512 பேரும் சேர்த்து 4,695 பேர் உள்ளனர்.
தற்போது வரை 3,207 பேருக்கு தபால் வாக்கு அளிக்கும் நபர்களுக்கு விண்ணப்பம் கொடுக்கப்பட்டு உள்ளது.
விருப்பமுள்ள வாக்காளர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். விண்ணப்பங்கள் பரிசீலனை செய்து சம்பந்தப்பட்ட நபர்கள் வாக்களிக்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.