விழுப்புரத்தில் இருந்து சட்டமன்ற தொகுதி வாரியாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை அனுப்பும் பணி
விழுப்புரத்தில் இருந்து சட்டமன்ற தொகுதி வாரியாக மின்னணு வாக்கு எந்திரங்களை அனுப்பும் பணியை கலெக்டர் அண்ணாதுரை பார்வையிட்டார்.
விழுப்புரம்,
தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந் தேதி நடக்கிறது. இதன் வாக்கு எண்ணிக்கை மே மாதம் 2-ந் தேதி நடைபெறுகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் 2,368 வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் பயன்பாட்டுக்காக சட்டமன்ற தொகுதி வாரியாக மின்னணு வாக்கு எந்திரங்களை அனுப்பி வைக்க கடந்த சில நாட்களுக்கு முன்பு கணினி மூலம் குலுக்கல் முறையில் மின்னணு வாக்கு எந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதை தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகள் வாரியாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை அனுப்புவதற்காக நேற்று காலை விழுப்புரம் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள இந்திய தேர்தல் ஆணைய சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்கு எந்திரங்கள் அறையை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அதிகாரியும் கலெக்டருமான ஆ.அண்ணாதுரை திறந்தார்.
மின்னணு வாக்கு எந்திரங்கள்
அதன் பின்னர் சேமிப்பு கிடங்கில் இருந்து ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்டதன் அடிப்படையில் மின்னணு வாக்கு எந்திரங்கள் லாரிகளில் ஏற்றப்பட்டது. தொடர்ந்து, அந்த லாரிகளை போலீஸ் பாதுகாப்புடன் அந்தந்த சட்டமன்ற தொகுதிகளுக்கு கலெக்டர் அண்ணாதுரை அனுப்பி வைத்தார்.
அதாவது செஞ்சி சட்டமன்ற தொகுதிக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களான (பேலட் யூனிட்) 436-ம் கட்டுப்பாட்டு எந்திரமான (கன்ட்ரோல் யூனிட்)- 436-ம், வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் வி.வி.பேட் கருவிகள் 465-ம், மயிலம் சட்டமன்ற தொகுதிக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் 368-ம், கட்டுப்பாட்டு எந்திரங்கள் 368-ம், வி.வி.பேட் கருவிகள் 392-ம், திண்டிவனம் சட்டமன்ற தொகுதிக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் 388-ம், கட்டுப்பாட்டு எந்திரங்கள் 388-ம், வி.வி.பேட் கருவிகள் 414-ம், வானூர் சட்டமன்ற தொகுதிக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் 393-ம், கட்டுப்பாட்டு எந்திரங்கள் 393-ம், வி.வி.பேட் கருவிகள் 419-ம், விழுப்புரம் சட்டமன்ற தொகுதிக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் 444-ம், கட்டுப்பாட்டு எந்திரங்கள் 444-ம், வி.வி.பேட் கருவிகள் 474-ம், விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் 396-ம், கட்டுப்பாட்டு எந்திரங்கள் 396-ம், வி.வி.பேட் கருவிகள் 423-ம், திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதிக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் 419-ம், கட்டுப்பாட்டு எந்திரங்கள் 419-ம், வி.வி.பேட் கருவிகள் 447-ம் ஆக மொத்தம் 7 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேவையான 2,844 வாக்குப்பதிவு எந்திரங்களும், கட்டுப்பாட்டு எந்திரங்கள் 2,844-ம், வி.வி.பேட் கருவிகள் 3,034-ம் அனுப்பி வைக்கப்பட்டது.
8,722 எந்திரங்கள் அனுப்பி வைப்பு
இதுகுறித்து கலெக்டர் அண்ணாதுரை, நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் பயன்பாட்டுக்காக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள், வி.வி.பேட் கருவிகள் என மொத்தம் 8,722 எண்ணிக்கையிலான எந்திரங்கள் அந்தந்த சட்டமன்ற தொகுதி வாரியாக போலீஸ் பாதுகாப்புடன் வாகனங்களில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த மின்னணு வாக்கு எந்திரங்கள் அனைத்தும் அந்தந்த சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள ஒரு அறையில் வைக்கப்பட்டு அந்த அறை அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் பூட்டி சீல் வைக்கப்படும்.
தேர்தலுக்கு முந்தைய நாள் இந்த அறை திறக்கப்பட்டு வாக்குச்சாவடி மையங்களுக்கு மின்னணு வாக்கு எந்திரங்கள் போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்படும். மின்னணு வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையை சுற்றிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்.
24 மணி நேரமும் அந்த அறைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த அறையில் மின்சார இணைப்பு முற்றிலும் துண்டிக்கப்படும். அங்கு மின்விளக்கு, மின்விசிறி எதுவும் கிடையாது.
துப்பாக்கிகள் ஒப்படைப்பு
அரசியல் கட்சியினர் மற்றும் உரிமம் பெற்று துப்பாக்கி வைத்துள்ளவர்கள் தேர்தல் ஆணைய விதிமுறையின்படி அருகில் உள்ள போலீஸ் நிலையங்களில் அந்த துப்பாக்கிகளை ஒப்படைக்க வேண்டும் என்று அறிவுறுத்தியதன்பேரில் இதுவரை 195 துப்பாக்கிகள் போலீஸ் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 19 துப்பாக்கிகள் மட்டும் உரிய அனுமதியுடன் வங்கிகளில் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்வின்போது தாசில்தார்கள் சீனிவாசன், வெங்கடசுப்பிரமணியன், பாலசுப்பிரமணியன், தி.மு.க. நகர செயலாளர் சக்கரை, வக்கீல் நடராஜன், தே.மு.தி.க. நகர செயலாளர் மணிகண்டன், பகுஜன் சமாஜ் கட்சி மாவட்ட செயலாளர் கலியமூர்த்தி உள்பட பலர் உடனிருந்தனர்.
............
பறக்கும் படை சோதனையில்
இதுவரை ரூ.28 லட்சம் பறிமுதல்
விழுப்புரம் மாவட்டம் முழுவதும் இதுவரை பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.23 லட்சத்து 82 ஆயிரத்து 310 ரொக்கம் மற்றும் ரூ.4 லட்சத்து 14 ஆயிரத்து 701 மதிப்பிலான பொருட்கள் என மொத்தம் ரூ.27 லட்சத்து 97 ஆயிரத்து 11 மதிப்புள்ள பணம் மற்றும் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கலெக்டர் அண்ணாதுரை கூறினார்.