விழுப்புரம், மயிலம், திண்டிவனத்தில் உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.3¾ லட்சம் பறிமுதல்
விழுப்புரம், மயிலம், திண்டிவனத்தில் உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.3¾ லட்சத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
விழுப்புரம்,
விழுப்புரம் சட்டமன்ற தொகுதி தேர்தல் பறக்கும் படை அதிகாரி அண்ணாமலை தலைமையில் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், போலீஸ்காரர்கள் கலையரசன், ராஜலட்சுமி ஆகியோர் அடங்கிய குழுவினர் நேற்று முன்தினம் இரவு விழுப்புரம் அருகே வி.அகரம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்தவரை சந்தேகத்தின்பேரில் வழிமறித்து அவர் வைத்திருந்த பையை சோதனை செய்ததில் அந்த பையினுள் ரூ.1 லட்சத்து 18 ஆயிரத்து 400 இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் அவர் புதுச்சேரி மாநிலம் மடுகரையை சேர்ந்த செந்தில்குமார் (வயது 49) என்பது தெரிந்தது.
மேலும் விசாரணையில், வியாபார ரீதியாக விழுப்புரம் வந்துவிட்டு மடுகரைக்கு பணம் கொண்டு செல்வதாகவும் கூறினார். இருப்பினும் அவரிடம் உரிய ஆவணம் ஏதும் இல்லாததால் அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து விழுப்புரம் தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
மயிலத்தில்...
இதேபோல் மயிலம் அருகே பாதிராப்புலியூரில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி ஜெயப்பிரகாஷ் தலைமையிலான குழுவினர் நேற்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை சந்தேகத்தின்பேரில் வழிமறித்து அவர் வைத்திருந்த பையை சோதனை செய்ததில் அந்த பையினுள் ரூ.1 லட்சத்து 28 ஆயிரத்து 240 இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணையில் அவர் திண்டிவனம் அருகே வெளியனூரை சேர்ந்த அய்யனார் (வயது 35) என்பது தெரிந்தது. மேலும் விசாரணையில் அவர், தான் நிதி நிறுவனத்தில் வேலை செய்து வருவதாகவும் கடன் பெற்றவர்களிடம் தொகையை வசூலித்துக்கொண்டு நிதி நிறுவனத்திற்கு செல்வதாகவும் கூறினார். இருப்பினும் அவரிடம் உரிய ஆவணம் ஏதும் இல்லாததால் அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து மயிலம் தேர்தல் நடத்தும் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
திண்டிவனம்
திண்டிவனம் அடுத்த ஆலத்தூர் கூட்டு ரோடு பகுதியில் பறக்கும் படை தலைமை அதிகாரி சரவணன் தலைமையிலான பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த மினிலாரியை நிறுத்தி சோதனை செய்த போது, அதில் வந்த மதுராந்தகம் நடுத் தெருவை சேர்ந்த மோகன்ராஜ் (வயது 24) என்கிற வியாபாரி மரக்காணம் பகுதியில் பிஸ்கட் மற்றும் நொறுக்குதீனி உள்ளிட்ட பொருட்களை வியாபாரம் செய்து ரூ. 1 லட்சத்து 30 ஆ யிரத்து 50 ரூபாயை எடுத்து வந்தார். அப்போது அவரிடம் உரிய ஆவணங்கள் இல்லாததால் அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட பணம் திண்டிவனம் தாலுகா அலுவலகத்தில் சப்-கலெக்டர் அனு முன்னிலையில் கணக்கிடப்பட்டு திண்டிவனம் கருவூலத்தில் செலுத்தப்பட்டது.