பல்லடம் சட்டமன்ற தொகுதியை ம.தி.மு.க.வுக்கு ஒதுக்கியதற்கு எதிர்ப்பு தி.மு.க.வினர் திடீர் சாலை மறியல்
பல்லடம் சட்டமன்ற தொகுதியை தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் ம.தி.மு.க.வுக்கு ஒதுக்கியதற்கு தி.மு.க. எதிர்ப்பு தெரிவித்து பல்லடத்தில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பொங்கலூர்
பல்லடம் சட்டமன்ற தொகுதியை தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் ம.தி.மு.க.வுக்கு ஒதுக்கியதற்கு தி.மு.க. எதிர்ப்பு தெரிவித்து பல்லடத்தில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தொகுதி ஒதுக்கீடு
தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந் தேதி நடக்கிறது. வேட்பு மனு தாக்கல் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குவதால் அரசியல் கட்சிகள் தாங்கள் கட்சி போட்டியிடும் தொகுதிகளையும், வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன. அ.தி.மு.க., .பா.ஜனதா மற்றும் தி.மு.க. கூட்டணி கட்சிகள், ம.நீ.ம. ஆகிய கட்சிகள் எந்தெந்த தொகுதியில் போட்டியிடுகின்றன, கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதி எவை? என அதிகார பூர்வமாகஅறிவித்தன.
அதன்படி தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் ம.தி.மு.க.வுக்கு பல்லடம் சட்டமன்ற தொகுதி ஒதுக்கப்படடது. பல்லடம் தொகுதியில் தி.மு.க. வுக்கு ஒதுக்கப்படும், என தி.மு.க.வினர் எதிர்பார்த்திருந்த நிலையில் அந்த தொகுதி ம.தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்டு இருப்பதாக அறிவிப்பு வெளியானது. இதனால் தி.மு.க.வினர் அதிர்ச்சியும், ஏமாற்றமும் அடைந்தனர்.
சாலை மறியல்
இந்த தொகுதியை ம.தி.மு.க.வுக்கு ஒதுக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று இரவு திடீரென நூற்றுக்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் பல்லடம் நால் ரோடு மற்றும் அருள்புரம் பகுதியில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பல்லடம் தொகுதியை தி.மு.க.வுக்கு ஒதுக்க வேண்டும் என்று கோஷமிட்டனர். இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது பற்றிய தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பல்லடம் போலீசார் அவர்களை சமாதானம் செய்து அப்புறப்படுத்தினர். இதனை தொடர்ந்து போக்குவரத்து சரியானது. இந்த சாலை மறியல் போராட்டத்தால் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.