கம்பத்தில் செல்போன் திருடிய 3 வாலிபர்கள் சி்க்கினர்
கம்பத்தில் மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த செல்போனை திருடிய 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
கம்பம்:
கம்பம் ஐசக் போதகர் தெருவை சேர்ந்த மணிகண்டன் மகன் சக்திவேல் (வயது 16). இவர் நேற்று முன்தினம் அதே பகுதியில் உள்ள இறகுப்பந்து மைதானத்திற்கு விளையாடுவதற்காக சென்றார். முன்னதாக தனது மோட்டார் சைக்கிளை மைதானம் முன்பு நிறுத்திவிட்டு, அதன் முன்புற பையில் ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை வைத்து சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது சக்திவேலின் செல்போனை காணவில்லை. இதுகுறித்து அவர் தனது தந்தையிடம் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து செல்போன் திருடுபோனது குறித்து கம்பம் வடக்கு போலீஸ் நிலையத்தில் மணிகண்டன் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜய்ஆனந்த் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதற்கிடையே கம்பம் புதிய பஸ் நிலையம் அருகே நேற்று சந்தேகப்படும் வகையில் 3 வாலிபர்கள் நின்று கொண்டிருந்தனர். அவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில், அவர்கள் பண்ணைப்புரத்தை சேர்ந்த நிதீஷ்குமார் (19), கபிலன் (20), கம்பத்தை சேர்ந்த காசிராஜன் (30) என்பதும், சக்திவேலின் செல்போனை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து பிடிபட்ட 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.