தேனியில் வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம்
தேனியில் கலெக்டர் தலைைமயில் வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
தேனி:
தேனி மாவட்டத்தில் 4 சட்டமன்ற தொகுதிகளிலும் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி பல்வேறு கட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக தேனியில் வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடந்தது. தேனி நகர் மதுரை சாலையில் ஆர்.சி. பள்ளி முன்பு தொடங்கிய ஊர்வலத்தை மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான கிருஷ்ணனுண்ணி தொடங்கி வைத்தார். பின்னர் கலெக்டர் தலைமையில் அதிகாரிகள் மற்றும் மாணவ-மாணவிகள் ஊர்வலமாக சென்றனர். பழைய பஸ் நிலையம், நேரு சிலை சிக்னல், பெரியகுளம் சாலை வழியாக சென்ற ஊர்வலம், என்.ஆர்.டி. சாலை சந்திப்பு பகுதியில் நிறைவடைந்தது. ஊர்வலத்தின்போது 100 சதவீத வாக்குப்பதிவு, பணம் வாங்காமல் வாக்களித்தல் போன்றவை தொடர்பான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் மாணவ-மாணவிகள், அலுவலர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில், பெரியகுளம் சப்-கலெக்டரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான சினேகா, போலீஸ் துணை சூப்பிரண்டு முத்துராஜ், தாசில்தார் தேவதாஸ், தேனி அல்லிநகரம் நகராட்சி ஆணையாளர் நாகராஜன், சுகாதார ஆய்வாளர் அறிவுச்செல்வம், தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை பொதுச்செயலாளர் ராஜ்மோகன், பொருளாளர் பழனியப்பன் மற்றும் கல்லூரி மாணவ- மாணவிகள் பலர் கலந்துகொண்டனர்.