தேர்தலை புறக்கணிக்க போவதாக கிராம மக்கள் அறிவிப்பு
கண்மாயில் உள்ள தண்ணீரை கல்லணை கிராமத்திற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர்.
திருமங்கலம்,
திருமங்கலம் தொகுதிக்கு உட்பட்ட கல்லணை கிராமத்தில் சுமார் 2,500 பேர் வசிக்கின்றனர். இங்குள்ள கண்மாய் மூலம் நெல், சோளம் உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த 20 ஆண்டு காலமாக இப்பகுதியில் சரியான மழை இல்லை. இதனால் கண்மாய் நிறைந்து 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. அதேபோல் இங்குள்ள ஆற்றில் தண்ணீர் வந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. இதனால் இந்த கிராமத்தில் நிலத்தடி நீர்மட்டம் ஆயிரம் அடிக்கு கீழே சென்று விட்டது.
இதனிடையே திருப்பரங்குன்றம் யூனியன் பகுதியில் உள்ள பெரிய உலகாணி கண்மாய்க்கு கால்வாய் மூலம் வைகை தண்ணீர் வந்து பெருகி உள்ளது. அந்தக் கண்மாயில் உள்ள தண்ணீரை கல்லணை கிராமத்திற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர்.
ஆனால் இது வரை நடவடிக்கை இல்லாத நிலையில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை புறக்கணிப்போம் என்று கிராம மக்கள் அறிவித்துள்ளனர். மேலும் முதல் கட்டமாக கருப்புக் கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.